சீனா: பாகிஸ்தான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெருமளவில் சீனாவின் உதவியை நாடி இருப்பதாக தெரிகிறது.
இரண்டு நாட்களில் பாகிஸ்தான் பிரதமர் சீனாவுக்கு அரசு முறை பயணமாக செல்ல இருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே புதிதாக சரக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் அரச முறை பயணமாக செவ்வாய்க்கிழமை சீனாவிற்கு செல்கிறார். அங்கு அவர் ஐந்து நாட்கள் தங்குகிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த சூழலில் , பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து சீனாவின் குயிஸோ நகருக்கு புதிய சரக்கு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இது வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தையும் பாகிஸ்தானின் லாகூர் நகரையும் இணைக்கும் வகையில் நேரடி விமான சரக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் பயணம் செய்ய இருக்கும் நிலையில் புதிய வழித்தடத்தில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான சரக்குகளும் இந்த வழித்தடத்தில் கொண்டு செல்லப்படும் என தெரிகிறது. குறிப்பாக துணிமணிகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இந்த வழித்தடத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
முதல் நாளில் சரக்குடன் சீனாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் ஆறு மணி நேரத்தில் பாகிஸ்தானின் கராச்சியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து நண்டுகளை ஏற்றிக் கொண்டு சீனா திரும்பியது.
வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த சரக்கு விமான போக்குவரத்து நடைபெறும் என்றும் துணிமணி ஹார்ட்வேர் பொருட்கள் உள்ளிட்டவைகள் கூட கொண்டு செல்லப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பில் இடம்பெற்றுள்ள நகரங்களுக்கிடையே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள சரக்கு விமான போக்குவரத்து இதுவாகும். அதேபோல குய்ஸோ மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் நேரடி விமான வழித்தடம் இதுவாகும் . இதன் மூலம் தென்கிழக்கு சீனாவின் முக்கியமான சரக்கு வினியோகம் மையமாக குய்ஸோ மாற்றமடையும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications