கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவித்து வருகின்றது.
குறிப்பாக 1971ல் இந்தியாவுக்கு எதிரான போரில் தோல்வியடைந்து, பங்களாதேஷில் இருந்து பிரிந்ததில் இருந்து, பாகிஸ்தான் மோசமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது.
குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான வளர்ச்சியினை எதிர்கொண்டு வருகின்றது.
மோசமான விலைவாசி
குறிப்பாக பாகிஸ்தானின் விலைவாசி என்பது மிக மோசமான ஒன்றாக இருந்து வருகின்றது. பல அத்தியாவசிய பொருட்களின் விலையானது விண்னை முட்டும் அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. பால் விலையானது லிட்டருக்கு 250 ரூபாயினை எட்டியுள்ளது. கோழி விலையானது கிலோவுக்கு 780 ரூபாயாகவும், இன்னும் பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் இதேபோன்று உச்சத்தில் உள்ளது. இதற்கிடையில் விலை அதிகமாக இருந்தாலும் கூட பல பொருட்களுக்கு பற்றாக்குறை என்பதும் இருந்து வருகின்றது.
வெளி கடன் விகிதம்
பாகிஸ்தானின் வெளி கடன் என்பதும், நடப்பு ஆண்டில் முதல் இரண்டு காலாண்டுகளில் மட்டும் 70% அதிகரித்துள்ளது. இது டாலரின் பற்றாக்குறையை மேலும் அதிகரித்துள்ளது. 2022 - 2023ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் கடன் செலுத்திய அளவானது, முந்தைய ஆண்டினை காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.
அதிகளவிலான வெளி நாட்டு கடன்களை செலுத்திய நிலையில், அன்னிய செலாவணி கையிருப்பானது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது பாகிஸ்தான் மத்திய வங்கியிடம் 3.2 பில்லியன் டாலர் எனும் அளவுக்கே அன்னிய செலாவணி கையிருப்பானது உள்ளது.
அன்னிய செலாவணி கையிருப்பு
பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு என்பது இந்த வாரம் 276 மில்லியன் டாலர் அதிகரித்து, 3.193 பில்லியன் டாலர் அளவுக்கு பிப்ரவரி 10 அன்று இருந்தது. இதே நாட்டின் மொத்த லிக்விட் அன்னிய செலாவணி கையிருப்பு என்பது 8.702 பில்லியன் டாலராக இருந்ததாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
நிதி பற்றாக்குறை
நிலவி வரும் கடும் கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் கடும் நிதி நெருக்கடியும் நிலவி வருகின்றது. கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நிதி பற்றாக்குறை என்பது 43% ஆக அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு பாகிஸ்தானை செலவினை குறைக்க வழிவகுக்கலாம். நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் என்பதும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
பணவீக்கம்
பாகிஸ்தானில் நிலவி வரும் பிரச்சனைகளில், இன்று பணவீக்கம் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதே வார விகிதத்தில் 38.42% எனும் அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
இது சமையல் எண்ணெய், வெங்காயம், எரிபொருள் விலை, சிக்கன் விலை என பலவும் மிக மோசமான உச்சத்தினை எட்டியுள்ளன. குறிப்பாக பெட்ரோல் விலையானது லிட்டருக்கு 22.20 ரூபாய் அதிகரித்து, 272 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தாமதம்
இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியமும், நிதி அளிப்பதாக கூறியிருந்தாலும் தாமதப்படுத்தி வருகின்றது. ஐஎம்எஃப் நிதியினை அளிக்க வேண்டும் என்றால், சில நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அரசு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதன் காரணமாகத் தான் கடந்த வாரத்தில் எரிபொருள் விலை மற்றும் வரியினை அதிகரித்தது.
பாகிஸ்தான் ரூபாய் Vs டாலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பானது தொடர்ந்து மோசமான உச்சத்தினை எட்டியுள்ளது. இது இறக்குமதி செலவினை அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் குறைந்துள்ள நிலையில், இது மேலும் ரூபாயில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 262.85 ரூபாயாகவும் உள்ளது. இது மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாகவும் மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications