வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில் நாள்தோறும் ஒரு முகத்தை காட்டி வருகிறார்.
திடீரென இந்தியாவுடன் மோதல் போக்கை கையாள்கிறார் திடீரென இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடு எனக் கூறுகிறார், பிரதமர் மோடி என்னுடைய நண்பர் என கூறுகிறா.ர் அதே வேளையில் இந்திய பொருட்களுக்கு வரியையும் விதித்திருக்கிறார். இப்படி மாறி மாறி பேசி வரக்கூடிய டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருப்பது தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் செரிஃப், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகிய இருவரும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் சென்று இருவரும் அதிபர் டிரம்பை சந்தித்து பேசியுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு , சர்வதேச அரசியல் சூழல் , வர்த்தகம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மூவரும் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். இந்தியாவுடன் உறவில் சிக்கல் நீடித்து வரக்கூடிய நிலையில் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமரையும் ராணுவ தளபதியையும் சந்தித்திருப்பது சர்வதேச அரசியலில் ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடியை நண்பர் என கூறும் டிரம்ப் மறுபுறம் பாகிஸ்தான் தலைவர்களை சிறந்த தலைவர்கள் என்றும் பாராட்டி இருக்கிறார் . டிரம்பின் இந்த இரண்டு இரட்டை வேடம் தான் தற்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. முன்னதாக பாகிஸ்தான் பிரதமரும் ராணுவ தளபதியும் டிரம்பை சந்தித்து பேசுவதற்காக வெள்ளை மாளிகையில் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய இருந்தது. பின்னர் தான் இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு முன்னதாக டிரம்ப் நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் சில அரபு நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். 8 இஸ்லாமிக் அரபு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசிய டிரம்ப் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான காஸா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமரும் சரி , ராணுவ தளபதியும் சரி டிரம்புடன் தொடர்ந்து நெருக்கம் காட்டிய வண்ணமே இருக்கின்றனர். குறிப்பாக பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை முடித்து வைத்தது டிரம்ப் தான் என இருவரும் வெளிப்படையாகவே கூறினர். இந்தியாவோ இதில் டிரம்பின் தலையீட்டை மறுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமரோ டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பொருத்தமானவர் என கூறி பாராட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications