பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் சியால்கோட்டில் ஒரு உணவகத்தை பீட்சா ஹட் பெயரில் திறந்து வைத்தார். ஆனால் இந்த உணவகம் உண்மையான பீட்சா ஹட் இல்லை, போலியாக அதே பிராண்டில் திறக்கப்பட்டது என்று பீட்சா ஹட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
பீட்சா ஹட் பாகிஸ்தான் நிறுவனம் உடனடியாக விளக்கம் அளித்தது. சியால்கோட் உணவகம் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஃபிரான்சைசி அல்ல என்றும், பிராண்ட் பெயர் மற்றும் லோகோவை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தது.

இந்த உணவகத்திற்கு தங்களுக்கும் எவ்விதமான தொடர்பு இல்லை என்று விளக்கியுள்ளது. மேலும், இந்த தவறான பயன்பாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க உரிய அரசு அமைப்பிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது பீட்சா ஹட்-இன் அதிகாரப்பூர்வ கிளைகள் 16 மட்டுமே உள்ளன. இதில் 14 லாகூரிலும், 2 இஸ்லாமாபாத்திலும் உள்ளன. சியால்கோட்டில் எந்த கிளையும் இல்லை என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பீட்சா ஹட் உலகளாவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் பிரபல உணவு சங்கிலி நிறுவனமாகும். 1958-ல் அமெரிக்காவில் டான் மற்றும் ஃபிராங்க் கார்னி சகோதரர்களால் தொடங்கப்பட்டது. தற்போது யம்! பிராண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. KFC மற்றும் டாகோ பெல் போன்ற பிரபல உணவு சங்கிலிகளும் இதே குழுமத்தின் கீழ் உள்ளன.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கேலிக்கு உள்ளானது. பலர் "பாதுகாப்பு அமைச்சர் போலியான ஃபிரான்சைசியை திறந்து வைத்தது அவமானம்" என்று கிண்டலடித்தனர். பாகிஸ்தான் அமைச்சருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும் சமுக வலைத்தளத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியல் மற்றும் நிர்வாகத்தில் நகைச்சுவையாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications