பொதுவாக நாம் வேலைக்கு சென்றால் அந்த அலுவலகம் தான் நமக்கு சம்பளத்தை வழங்கும். ஆனால் சீனாவில் அண்மை காலமாக தொடங்கும் அலுவலகங்களில் வேலைக்கு செல்பவர்கள் தான் தினம் தினம் வாடகை கொடுக்கிறார்கள்.
சீனா: உலகின் உற்பத்தி மையம் என அழைக்கப்படுகிறது சீனா. ஆனால் சீனாவில் அண்மைக்காலமாகவே வேலை வாய்ப்பின்மை பிரச்சினை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பலரும் வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்படி வேலை இல்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்காகவே சீனாவில் புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை சீனர்கள் Pretend to work என அழைக்கிறார்கள் .

புது டிரெண்ட்:சீனாவின் பல்வேறு பகுதிகளில் வழக்கமான அலுவலகங்களைப் போலவே அலுவலக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. வேலை இல்லாதவர்கள் தினமும் வந்து காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை இந்த அலுவலகத்தில் இருக்கலாம். இதற்காக அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தினால் போதும். வேலை வாய்ப்பு கிடைக்காத பல இளைஞர்களும் தற்போது இந்த போலி அலுவலகங்களுக்கு வந்து தான் தங்களுடைய பெற்றோர்களையும் உற்றார் உறவினர்களையும் தாங்கள் வேலைக்கு செல்வதாக ஏமாற்றுகிறார்களாம்.
இது ஆபிஸ் தான் ஆனா ஆபிஸ் இல்ல: இதுபோன்ற அலுவலகங்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என சீன நாட்டு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கக்கூடிய இளைஞர்கள் தங்களுடைய பெற்றோர் உற்றார் உறவினர்களிடம் வேலைக்கு செல்வதைப் போல நடிப்பதற்கு இந்த அலுவலகங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். இதற்காக ஒரு நாளைக்கு 365 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

மன அமைதி: வேலை வாய்ப்பு இல்லையே என மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்த அலுவலகங்கள் சற்றே மன அமைதியை தருகிறதாம் நம்மை போலவே பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர் என்பதோடு மட்டுமில்லாமல் இவர்கள் ஒருவர் மற்றொருவருக்கு ஆறுதலாகவும் வேலை தேடுவதற்கு உதவியாகவும் இருக்கிறார்கள். சீனாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 14 சதவீதமாக இருக்கிறது.
வேலை தேடுபவர்களுக்கு நிம்மதி: இதனால் தான் அங்கே இந்த மாதிரி அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம் . இங்கே ஒரு அலுவலகத்தில் இருப்பதைப் போலவே கம்ப்யூட்டர் ,ஆலோசனை அறைகள், வைஃபை வசதி, உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும். ஆனால் இங்கே வரக்கூடியவர்கள் யாரிடமும் வேலை செய்பவர்கள் கிடையாது. ஃப்ரீலேன்சிங் முறையில் வேலை பார்ப்பவர்கள், வேலை தேடுபவர்கள் அமைதியான முறையில் அவற்றை செய்ய இந்த அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மரியாதை தருகிறது: Pretend to work என்ற நிறுவனத்தை தொடங்கி இது போன்ற மாதிரி அலுவலகங்களை திறக்கும் சூடான்மோ ஃபையோ என்பவர் தன் ஒரு தொழில் முனைவோராக இருந்ததாகவும் கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய தொழில் நஷ்டம் அடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் . ஒரு சோதனை முறையில் தான் இப்படி ஒரு அலுவலகத்தை நான் தொடங்கினேன் ஆனால் அதற்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது, அவர்கள் இங்கே வெறுமனே வந்துவிட்டு சென்றாலும் சமூகத்தில் அவர்களுக்கான ஒரு மரியாதையும் மதிப்பையும் நிலை நிறுத்துவதற்கு இந்த அலுவலகங்கள் உதவுகின்றன என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications