இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் 3 லட்சத்தைத் தாண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள நிலையில் அமெரிக்காவின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு ஜோ பைடன் அரசுக்கு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு மே 1ஆம் தேதி முதல் காட்டுத்தீ போலப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி பெற அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் சேம்பர் ஆஃப் காமர்ஸ்
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவிற்கு உதவும் வகையில் அமெரிக்காவின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு ஜோ பைடன் தலைமையிலான அரசை பாதுகாப்பு கிடங்கில் இருக்கும் பல மில்லியன் கணக்கான AstraZeneca வேக்சினை இந்தியா, பிரேசில் மற்றும் இதர நாடுகளுக்கு அளிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
மூலப்பொருட்கள் ஏற்றுமதியில் சிக்கல்
இதேபோல் இந்தியாவிற்குக் கொரோனை வேக்சின் தயாரிக்க உதவும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், இதை நீக்கவும் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கோரிக்கை விடுத்து விரைவில் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா, பிரேசில்
மேலும் அமெரிக்காவில் இருக்கும் வேக்சின் உற்பத்தி தளத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் நாட்டு மக்களுக்குத் தேவையான வேக்சினை தயாரிக்க முடியும் நிலையில் பாதுகாப்புக் கிடங்கில் இருக்கும் மில்லியன் கணக்கான தடுப்பு மருந்தை தற்போது அதிகத் தேவை கொண்ட நாடுகளாக இருக்கும் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அளிக்கலாம் எனச் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் துணை நிர்வாகத் தலைவர் மற்றும் சர்வதேச விவகார பிரிவின் தலைவருமான Myron Brilliant தெரிவித்துள்ளார்.
Quad நாடுகளின் வேக்சின் ஒப்பந்தம்
ஆனால் அமெரிக்கா Quad நாடுகள் மத்தியிலான வேக்சின் ஒப்பந்தத்தை மீற முடியாது எனக் கூறுகிறது. இந்தக் கூவாட் நாடுகள் பட்டியலில் ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளது. இந்த நாடுகள் மத்தியில் தொற்று அளவை பொருந்து வேக்சின் பகிரப்படும்.
மோடி - பைடன் ஆலோசனை
இதேவேளையில் இந்தியப் பிரதமர் மோடியும், ஜோ பைடனிடம் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் வேக்சின் தேவை குறித்தும் ஆலோசனை செய்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்குத் தற்போது தேவையில்லாமல் இருக்கும் சேமித்து வைத்திருக்கும் வேக்சினை தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் அளிக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications