ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 2020ல் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவன பங்குகளை விற்பனை செய்து திரட்டிய பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.
இந்த வர்த்தக விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகச் சந்தையில் இருக்கும் பல நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது குழும வர்த்தகத்துடன் இணைத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நேற்று அமெரிக்காவின் பேட்டரி நிறுவனமான அம்பரியில் சுமார் 50 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்த நிலையில், தற்போது புதிதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
டி-மொபைல் நெதர்லாந்து நிறுவனம்
ஜெர்மன் நாட்டின் Bonn நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டாய்ச் டெலிகாம் நிறுவனத்தின் நெதர்லாந்து வர்த்தகமான டி-மொபைல் நெதர்லாந்து நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பும் எவ்விதமான அறிவிப்பு வெளியிடாத நிலையில் உறுதிப்படுத்தப்படாத தகவலாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆலோசனை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது டி-மொபைல் நெதர்லாந்து நிறுவனத்தின் மதிப்பைக் கணிக்கும் ஆய்வுக் குழுவுடன் பணியாற்றி வருவதாகவும், ரிலையன்ஸ் டி-மொபைல் நெதர்லாந்து-ஐ 5 பில்லியன் யூரோ அல்லது 5.9 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பிற்குக் கைப்பற்றத் திட்டமிட்டு வருகிறது.
மோர்கன் ஸ்டான்லி உடன் டி-மொபைல் கூட்டணி
டாய்ச் டெலிகாம் நிறுவனம் தனது நெதர்லாந்து வர்த்தகத்தை விற்பனை செய்வதற்காக மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மேலும் நெதர்லாந்த் வர்த்தகத்தைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யவும் தயாராக உள்ள நிலையில் பல முன்னணி தனியார் பங்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் ரிலையன்ஸ் டெலிகாம்
இந்தியாவிலேயே அதிகச் சந்தை மதிப்புக் கொண்ட நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஐரோப்பிய சந்தையில் இருக்கும் டி-மொபைல் பிராண்டின் நெதர்லாந்து வர்த்தகத்தை வாங்குவது என்பது மிகவும் அரிதான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வர்த்தகம் நிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
ஜியோ இந்தியா
டெலிகாம் வர்த்தகத்தில் ஜியோ வேகமாக வளர்ந்து வந்தாலும், இந்தியாவில் இந்நிறுவனம் வளர்ச்சி அடைய பல பிரிவுகள் இன்னமும் உள்ளது. பல புதிய திட்டங்கள் இன்னமும் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கும் வேளையில் ரிலையன்ஸ் ஐரோப்பிய சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்புகள் மிகவும் குறைவு.


Click it and Unblock the Notifications