இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களில் சில முக்கியமான விதிகள் கடைப்பிடிப்பது வழக்கம். அதாவது நிறுவனத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ஊழியர்கள் உடன் எவ்விதமான தனிப்பட்ட உறவுகளையும் வைத்திருக்கக் கூடாது என்பது தான்.
இந்த விதிகளை மீறிய பலர் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர், ஏன் பில் கேட்ஸ் கூட சில வருடங்களுக்கு முன்பு இதேபோன்ற பிரச்சனை வெடித்த போது, நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து வெளியேறிவிட்டார். 2021 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்தது மட்டும் அல்லாமல் பில் கேட்ஸ் இதை ஒப்புக்கொண்டார்.

ராயல் பேங்க் ஆஃப் கனடா-வின் நிதித் தலைமை அதிகாரி (CFO) நடின் ஆன் (Nadine Ahn) வெளியேற்றத்தைத் தொடர்ந்து, கேத்ரின் கிப்சன் இடைக்கால நிதித் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அறிவிப்பு வெளியானது.
பொதுவாக வங்கிகளின் மூத்த அதிகாரிகளின் வெளியேற்றம் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடைபெறும். ஆனால் நடின் ஆன் திடீர் வெளியேற்றக் கனடா நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அவரது வெளியேற்றத்திற்கான காரணம் கேட்டு தற்போது கார்ப்பரேட் உலகில் சலசலப்பு நிலவுகிறது.
இதுகுறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நடின் ஆன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும், இது நிர்வாகத்திற்குத் தெரியவந்ததையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், நடின் ஆன் வங்கியின் நடத்தை விதிமுறைகளை மீறி, வங்கியின் மற்றொரு ஊழியருடன் நெருக்கமான தனிப்பட்ட உறவை வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக, அந்த ஊழியருக்கு நடின் ஆன் தனிப்பட்ட பரிந்துரையின் கீழ் வங்கியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்படச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டன என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விதிமீறல் காரணமாக, இரு ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்க வங்கி முடிவு செய்துள்ளது.
நடின் ஆன் செப்டம்பர் 2021 இல் நிதித் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவ்வங்கியில் முதலீட்டாளர் உறவுகள் தலைவராக இருந்தார்.
நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் நிதித் தலைமை அதிகாரி நடின் ஆன் அல்லது அவர் ரகசிய உறவு கொண்டு இருந்த மற்றொரு ஊழியர்களின் செயல்பாடுகள் வங்கியின் நிதி அறிக்கைகள், உத்தி அல்லது அதன் நிதி அல்லது வணிக செயல்பாடுகள் தொடர்பாக எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை, இதில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ராயல் பேங்க் ஆஃப் கனடா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications