ராம்புர்ஹாட், மேற்கு வங்கம்: சுமார் 1.6 கிலோ எடையுள்ள நகைகள் (தங்கம், வெள்ளி உட்பட), 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள், மூக்குத்திகள், வளையல்கள், கொலுசுகள், கைக் கடிகாரங்கள், கையில் கட்டிக் கொள்ளும் பேண்டுகள் என பல சாமான்களை இளம் வயது Runi Khatun என்கிற பெண்ணின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள் எடுத்திருக்கிறார்களாம்.
வீட்டில் வைத்திருக்கும் காசு, பணம், நகைகள் எல்லாம் தொலைந்து போவதைப் பார்த்து பல முறை Runi Khatun-யிடம் விசாரித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் Runi Khatun அழத் தொடங்கிவிடுவாராம். ஆகையால் அதிகம் கேட்காமல் போகட்டும் என விட்டு விடுவார்களாம்.

Runi Khatun சில வாரங்களுக்கு முன்பிருந்து, கொஞ்சம் மன நலம் பாதிக்கப்பட்டவரைப் போல நடந்து கொண்டதாக அவரின் தாய் மருத்துவர்களிடம் சொல்லி இருக்கிறார்.
திடீரென ஒரு நாள் அதிகம் வயிறு வலிப்பதாகச் சொல்லி இருக்கிறார் Runi Khatun. உடனடியாக அவர் குடும்பம் Runi Khatun-ஐ ராம்புர்ஹாட் மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். மருத்துவர்கள் பல்வேறு சோதனைகளைச் செய்த பின் வயிற்றில் உலோகங்கள் இருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அதன் பின் தான் சுமார் 75 நிமிடம் அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்து மேலே சொன்னது போல கைக் கடிகாரம் தொடங்கி, நகை நட்டுக்கள், நாணயங்கள் என எல்லாவற்றையும் வெளியில் எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான பொருட்கள், ரப்பர் மற்றும் பித்தளைகளால் செய்யப்பட்டவையாம். இதை ராம்புர்ஹாட் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சித்தார்தா பிஸ்வாஸும் உறுதி செய்திருக்கிறார்.
Runi Khatun-க்கு எப்போது எல்லாம் பசித்திருக்கிறதோ அப்போது எல்லாம் நகைகளையும், நாணயங்களையும் சாப்பிட்டிருப்பதாக, Runi Khatun-யிடம் பேசிய மருத்துவர் ஒருவர் சொல்லி இருப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.
Runi Khatun-ன் மனநிலை அத்தனை சீராக இல்லை என்பதால், அவரை மன நல மருத்துவரிடமும் அனுப்பி இருப்பதாக ராம்புர்ஹாட் மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் ஷர்மிளா மோலிக் சொல்லி இருக்கிறார். Runi Khatun-க்கான அறுவை சிகிச்சை முடிந்த பின் Runi Khatun-ன் மன நிலை சீராக இருந்தாலும், மன நல மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார் ஷர்மிளா.


Click it and Unblock the Notifications