பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில், உக்ரைனின் குசும் பகுதியில் அமைந்துள்ள இந்திய மருந்து நிறுவனமான குசும் நிறுவனத்தின் குடோனை ரஷ்யா ஏவிய ஏவுகணை தாக்கியதாக, உக்ரைனின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள இந்திய வணிகங்களை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைத்ததாக உக்ரைன் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது இந்தியாவுடன் 'சிறப்பு நட்பு' என்று கூறிக்கொண்டாலும், மாஸ்கோ வேண்டுமென்றே இந்திய வணிகங்களை குறிவைக்கிறது, குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்காக கொண்டுவரப்பட்ட மருந்துகளையும் அழிக்கிறது" என தூதரகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, உக்ரைனில் உள்ள பிரிட்டன் தூதர் மார்டின் ஹாரிஸ், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், இந்த தாக்குதலுக்கு ஏவுகணைகள் அல்ல, ரஷ்யா இயக்கிய ட்ரோன்கள்தான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதாவது, நேற்று காலை ரஷ்யா இயக்கிய ட்ரோன்கள் கீவில் உள்ள ஒரு முக்கியமான மருந்துக் குடோனை முற்றிலும் அழித்தன, அதில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குத் தேவையான மருந்துகளின் கையிருப்புகள் எரிந்து நாசமடைந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் பொதுமக்களுக்கு எதிரான ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல் தொடர்கிறது என்று ஹாரிஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட குடோன் இந்திய மருந்து நிறுவனத்துக்குச் சேர்ந்ததா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை. மேலும் இவர் பகிர்ந்த புகைப்படங்களில், குடோனில் இருக்கக் கூடிய ஒரு கட்டிடத்திலிருந்து புகை எழுவதையும், சம்பவ இடத்தில் ஒரு தீயணைப்பு வாகனம் இருப்பதையும் காட்டியது.
இதேபோல் மற்றொரு தாக்குதலின்போது, கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ஐந்து தாக்குதல்களை நடத்தியதாகவும், இது அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எரிசக்தி வசதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் மீதான தடையை மீறியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த மாதம் ஒருவருக்கொருவர் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ஒப்புக்கொண்டன, இருப்பினும், இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் பலமுறை குற்றம் சாட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications