சான்பிரான்சிஸ்கோ , அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக கூகுள் செயல்படுகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவரும் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவருமான செர்ஜி பிரின் 700 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை தானமாக வழங்கியிருக்கிறார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் 8ஆவது இடத்தில் இருக்கிறார். இவர் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் தனக்கு சொந்தமாக இருந்த 700 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை தானமாக வழங்கியிருக்கிறார். இதன் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய் இருக்கும் என ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. தன்னுடைய பங்குகளில் கணிசமான பகுதியை கேட்டலிஸ்ட்4 என்ற தொண்டு அமைப்பிற்கு வழங்கியிருக்கிறார்.

இது செர்ஜி பிரினால் தொடங்கப்பட்ட ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. அதேபோல பருவநிலை மாற்ற பாதிப்புகளை தீர்ப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறது. அதேபோல 5,80,000 ஆல்பாபெட் பங்குகளை தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமான அறக்கட்டளைக்கு இவர் தானமாக வழங்கியிருக்கிறார். அடுத்ததாக மைக்கேல் ஜே பாக்ஸ் அறக்கட்டளைக்கு 2,82,000 பங்குகளை இவர் தானமாக வழங்கிருக்கிறார்.
இந்த அறக்கட்டளை பார்க்கின்சன் நோய் மருந்து குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ச்சியாக தன்னுடைய வருமானத்தில் கணிசமான பகுதியையும் தனக்கு சொந்தமாக இருக்கும் ஆல்பபெட் பங்குகளையும் இதுபோல தானமாக வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் செர்ஜி பிரின். 2023 ஆம் ஆண்டு இவர் 600 மில்லியன் டாலரை கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் திறன் கொண்ட தேடுபொறிக்கான ஆய்வுப் பணிகளுக்கு வழங்கினார்.
மீண்டும் 100 மில்லியன் டாலர்களை 2024 ஆம் ஆண்டு கூகுளின் தொழில்நுட்ப ஆய்வு பணிக்காக வழங்கினார். 2004 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை செர்ஜி பிரின் தனக்கு சொந்தமாக இருந்த சுமார் 11 பில்லியன் பங்குகளை இதுபோல தானமாக வழங்கியிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. செர்ஜி பிரின் 2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இருந்தாலும் தொடர்ந்து கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் வாரிய உறுப்பினர்களுள் ஒருவராக இருந்து வருகிறார்.
ரஷ்யாவில் பிறந்த இவர் ஆறு வயதாக இருக்கும் போதே அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர். 1998 ஆம் ஆண்டு இவரும் லாரி பேஜும் இணைந்து தான் கூகுள் நிறுவனத்தை தொடங்கினர். தற்போது 51 வயதாகக்கூடிய செர்ஜி பிரினின் சொத்து மதிப்பு 134 பில்லியன் டாலர்களாக இருக்கிறது இந்திய ரூபாயின் மதிப்பில் 11.52 லட்சம் கோடி ஆகும். 6,000 கோடி ரூபாயை தானமாக வழங்கிய பின்னரும் இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் தொடர்ந்து எட்டாவது இடத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications