நியூயார்க், அமெரிக்கா: ஐநா பொது குழு கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்கள்.
இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். ஐநா அவையில் வந்து பேசி முடித்து திரும்பச் செல்லும் வரை பல்வேறு சிக்கல்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவை அனைத்தும் தானாக அல்லது தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல என்ற ஒரு புதிய குற்றச்சாட்டை டிரம்ப் முன் வைத்திருக்கிறார். தனக்கு எதிராக நாசவேலை நடக்கிறது என்றும் அவர் சாடியிருக்கிறார்.

ஐநா பொதுகுழு கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொள்ள வந்த போது மாடிக்கு செல்லும்போது எஸ்கலேட்டர் செயல் இழந்தது, அதேபோல அவருக்கான டெலி பிராம்ப்டர் வேலை செய்யவில்லை . பின்னர் அவர் பேசும்போது யாருக்கும் அவருடைய பேச்சை கேட்காத அளவுக்கு ஒலியும் நின்று போய்விட்டது. இந்த மூன்று நிகழ்வுகளும் தற்செயலான நிகழ்வு அல்ல தனக்கு எதிராக ஐநாவில் நிகழ்த்தப்பட்ட நாச வேலைகள் என டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டிரம்ப், ஐநா சபையில் எனக்கு நடந்தது ஒரு அவமானம் என தெரிவித்திருக்கிறார் . எனக்கு எதிராக ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நாச வேலைகள் நடந்தன. முதலாவதாக நான் மாடிக்கு செல்லும்போது எஸ்கலேட்டர் செயல் இழந்துவிட்டது. நல்வாய்ப்பாக நானும் மெலனியாக கைகளை இறுகப்பற்றி கொண்டதால் கீழே விழாமல் தப்பித்தோம் என கூறியுள்ளார். நாங்கள் செல்லும் போது எஸ்கலேட்டரை அணைத்தது யார் அவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
அடுத்ததாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் என்னுடைய ஐநா உரையை பார்ப்பதற்காக காத்திருந்தார்கள். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அந்த அரங்கில் எனக்கு முன்னால் இருந்தார்கள் நான் பேச்சை தொடங்கும் போது எனக்கான டெலி பிராம்ப்டர் வேலை செய்யவில்லை. முதலில் எஸ்கலேட்டர் இப்போது டெலி பிராம்ப்டரா ? இது என்ன மாதிரியான ஒரு இடம் என அப்போது நினைத்துக் கொண்டேன் எனக் கூறியுள்ளார்.
டெலி பிராம்ப்டர் இல்லாமலேயே நான் என்னுடைய உரையை நிகழ்த்தி தொடங்கினேன். உரை நிகழ்த்திய பிறகு நான் மெலனியாவிடம் நான் எப்படி பேசினேன் என கேட்டதற்கு நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையும் என்னால் கேட்க முடியவில்லை என அவர் கூறினார் .அப்படி என்றால் நான் பேசும்போது அந்த ஆடிட்டோரியத்தில் யாருக்கும் அந்த ஒலியே சென்று சேரவில்லை.
இவை அனைத்துமே தற்செயலான நிகழ்வு கிடையாது எனக்கு எதிரான நாசவேலை என குறிப்பிட்டு இருக்கும் அவர் ஐநா பொது சபையை சேர்ந்தர்கள் இதை நினைத்து வெட்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறார் . இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கும் அவர் இது தொடர்பாக ரகசிய போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.ஆனால் ஐநா தரப்பிலோ இவை அனைத்து தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட தவறுகள் தான் என்றும் வேண்டுமென்றே யாரும், இவற்றை செய்யவில்லை என்றும் விளக்கம் தந்துள்ளது.


Click it and Unblock the Notifications