ஈரான் போர் ஆசிய நாடுகளை கடுமையாக பாதித்திருக்கிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளுக்கு தேவையான கச்சா எண்ணெய், எல்பிஜி, உரம் உள்ளிட்டவை வளைகுடா நாடுகளில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கு ஹார்முஸ் ஜலசந்தி தான் வழித்தடம். ஆனால் ஈரான் போர் காரணமாக இந்த பகுதியில் இருந்து சரக்கு போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் பல நாடுகளில் எல்பிஜி, பெட்ரோல் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கூட எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கிறது. ஈரான் போரால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை இருக்கிறது. இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெட்ரோல் நிலையங்கள் எங்கும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அதே போல சிலிண்டர்களும் கிடைக்காமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அரசு எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விநியோகத்தை கண்காணிக்க சில தினங்களுக்கு முன்னர் தான் வாகனங்களுக்கு க்யூ ஆர் கோடு கட்டாயம் என்ற நடைமுறையை கொண்டு வந்தது. இதற்கிடையே எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இலங்கை அரசு வேலை நாட்களை குறைத்து இருக்கிறது.
இலங்கையில் மருத்துவத்துறை, சுங்கத்துறை, குடிநீர், துறைமுகம் ,பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் மட்டுமே வாரத்தின் ஏழு நாட்களும் இயங்கும். மற்ற துறைகள் அனைத்தும் வாரத்தின் நான்கு நாட்கள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல பள்ளி கல்லூரிகளும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சனி , ஞாயிறு மற்றும் புதன்கிழமைகள் விடுமுறை நாட்களாக இருக்கும்.

எனவே இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு சீராகும் வரை வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை, நான்கு நாட்கள் வேலை என்ற நடைமுறைதான் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் இலங்கையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் கையிருப்பில் இருக்கும் எரிபொருளை சரியான முறையில் பிரித்து பயன்படுத்தவும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது . தனியார் நிறுவனங்களும் வாரத்தில் 4 நாட்கள் வேலை என்ற நடைமுறைக்கு மாற அறிவுறுத்தியுள்ளது.
அதே வேளையில் பெட்ரோல், டீசல் பதுக்களை தடுக்க வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்கு 15 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் மட்டுமே கிடைக்கும் என்றும் பொது போக்குவரத்துக்கு ஒரு வாரத்திற்கு 200 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் இருப்பில் இருக்கக்கூடிய பெட்ரோல், டீசல் அடுத்த ஆறு வாரங்கள் வரை பயன்படுத்த முடியும் என இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications