அமெரிக்காவை சேர்ந்த பிரபல காலணி பிராண்டான ஸ்கெச்சர்ஸை (Skechers) 3ஜி கேப்பிடல் நிறுவனம் கையகப்படுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற காலணி பிராண்டாக ஸ்கெச்சர்ஸ் இருந்து வருகிறது. இதனை 3ஜி கேப்பிட்டல் என்ற முதலீட்டு நிறுவனம் 9.4 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கி இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்கெச்சர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்தின் வாரியக்குழு இயக்குனர்கள் கூட்டம் நடத்தப்பட்டு இந்த ஒப்பந்தத்திற்கு முழுமையான ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி 3ஜி கேப்பிட்டல் என்ற முதலீட்டு நிறுவனம் ஸ்கெச்சர்ஸை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடும். ஒரு பங்கின் மதிப்பு 63 டாலர்கள் என்ற விலையில் ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 3ஜி கேப்பிட்டல் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குள் நிறுவனம் முழுவதுமாக 3ஜி கேப்பிடல் வசம் சென்றுவிடும்.
2024 ஆம் ஆண்டில் ஸ்கெச்சர்ஸ் நிறுவனம் 9 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டி இருந்தது. ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்தின் 15 சதவீத வருமானம் சீனாவில் இருந்து தான் வருகிறது. தற்போது நிறுவனத்தை 3ஜி கேப்பிடல் கையகப்படுத்தி இருந்தாலும் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ராபர்ட் கிரீன் பார்கே தொடர்ந்து நிறுவனத்தை மேலாண்மை செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமையகம் தொடர்ந்து கலிபோர்னியாவிலேயே செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
ஸ்கெச்சர்ஸ் நிறுவனம் கை மாறுவதாக செய்தி வெளியானதை அடுத்து அமெரிக்க பங்குச்சந்தையில் ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 25 சதவீதம் உயர்ந்து 61 டாலர்கள் என வர்த்தகமானது . இண்டிரா டே வர்த்தகத்தில் ஸ்கெச்சர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 61.94 டாலர்கள் என்ற உச்சத்தை எட்டியது.
அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு காலணி உற்பத்தி நிறுவன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் தான் ஸ்கெச்சர்ஸ். 1992 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் மூன்றாவது பெரிய காலணி பிராண்டாக இது இருக்கிறது. உலகம் முழுவதும் 5296 இடங்களில் இந்த நிறுவனம் தன்னுடைய விற்பனை நிலையங்களை அமைத்து காலணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது.
அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரி விதித்தார். ஸ்கெச்சர்ஸ் உள்ளிட்ட அமெரிக்கா நிறுவனங்களின் காலணிகள், பைகள் உள்ளிட்டவை எல்லாம் சீனாவில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இறக்குமதி வரி உயர்வால் இந்த பிராண்டுகள் இதற்கு முன்பு இருந்ததை விட கூடுதல் விலைக்கு இவற்றை வாங்க வேண்டி இருக்கும். எனவே அமெரிக்க பிராண்டுகள் எல்லாம் என்ன செய்வதென திகைத்து நிற்கின்றன. இந்த சூழலில் தான் ஸ்கெச்சர்ஸ் நிறுவனமே விற்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications