இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குரூப் இந்தியாவைத் தாண்டி உலகில் பல நாடுகளில், பல வர்த்தகங்களைச் செய்து வருகிறது. இப்படிப் பிரிட்டனில் (UK) டாடா ஸ்டீல் மிகப்பெரிய உற்பத்தி கட்டமைப்பைப் பல இடங்களில் தனித்தனியாகப் பிரித்து வைத்து இயங்கி வருகிறது.
இதன் படி 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் (Wales) பகுதியில் உள்ள போர்ட் டால்போட் ஸ்டீல் வொர்க்ஸ் தொழிற்சாலையில் உள்ள இரண்டு பிளாஸ்ட் பர்னேஸ்களை மூடப்போவதாக டாடா ஸ்டீல் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்தின் இந்த முடிவின் காரணமாக இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த
2,800 பேர் தங்களுடைய வேலையை இழக்க உள்ளனர்.

டாடா குழுமம் பிரிட்டன் நாட்டில் மிகப்பெரிய வர்த்தகத்தை வைத்துள்ளது, இதில் ஸ்டீல் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி மிகவும் முக்கியமானது. என் சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் டாடா சன்ஸ் நிர்வாகம் இந்த 2 பிளாஸ்ட் பர்னேஸ்களுக்குத் தீர்வு காணப் பல காலமாக முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது மூடப்பட முடிவு எடுத்துள்ளது டாடா ஸ்டீல் நிர்வாகம்.
பிரிட்டன் நாட்டின் டாடா ஸ்டீல் பிரிவு தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், இதை லாபகரமாக மாற்றுவதற்கும், இதன் ஊழியர்களை வேலை இழக்காமல் காப்பதற்கும் கடந்த 3 வருடமாகத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாகப் பிரிட்டன் டாடா ஸ்டீல் தொழிற்சாலையில் இருக்கும் பிளாஸ்ட் பர்னேஸ்களை நீக்கிவிட்டு கார்பன் உமிழ்வைக் குறைத்து வெளியிடும் எலக்ட்ரிக் ஆர்க் பர்னேஸ்களாக மாற்ற பிரிட்டன் அரசிடம் 500 மில்லியன் பவுண்ட் மதிப்பிலான நிதியுதவியைக் கேட்டு வந்தது, ஆனால் ரிஷி சுனக் அரசு செவிசாய்க்காத நிலையில் பிளாஸ்ட் பர்னேஸ்களை மூட தற்போது முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அடுத்த 18 மாதங்களில் சுமார் 2,500 ஊழியர்கள் தங்களுடைய பணியை இழக்க வாய்ப்புள்ளது, Port Talbot steelworks தொழிற்சாலையில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தமாக 2,800 ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர் என டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் எடுத்துள்ள மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நிர்வாகம் ஊழியர்கள் உடன் ஆலோசனை செயல்முறையைத் தொடங்கும், இதில் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்வோர் எண்ணிக்கை உயர்த்தும் முயற்சியில் இறங்க உள்ளது டாடா ஸ்டீல்.

"நாங்கள் எடுத்துள்ள முடிவு கடினமானது, ஆனால் அது சரியானது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று டாடா ஸ்டீல் தலைமை நிர்வாகி டி வி நரேந்திரன் கூறினார். டாடா ஸ்டீல் பிரிட்டனில் (UK) சுமார் 8000 பேரை பணியில் அமர்த்தியுள்ளது, பிரிட்டன் அரசு 2023 செப்டம்பர் மாதம் 5000 ஊழியர்களுக்கான பாதுகாப்பை மட்டுமே கொடுத்தது, இதனால் 3000 ஊழியர்களின் வேலைக்குப் பாதிப்பு உருவானது.
இதேப் பாதையில் தான் தற்போது பிரிட்டன் நாட்டில் சீனா இயக்கி வரும் British Steel நிறுவனமும் எதிர்கொண்டு வருகிறது. இதன் மூலம் 2000 ஊழியர்கள் தங்களுடைய பணியை இங்கு இழக்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications