உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் தலைவர் எலான் மஸ்க், வருமான வரி செலுத்துவதற்காகத் தன்னிடம் இருந்த டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து வந்த நிலையில், மீண்டும் புதிதாக 973 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை அமைப்பான SEC-க்கு சமர்ப்பித்த அறிக்கையில் எலான் மஸ்க் 21 லட்சம் பங்குகளை 2.2 பில்லியன் டாலருக்கு கைப்பற்றி, அதில் 934,091 பங்குகளை 973 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்து அதை வரியாகச் செலுத்தியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் இரண்டு வாரங்களுக்கு முன்பு தன்னிடம் வருமான வரி செலுத்தப் பணம் இல்லாத காரணத்தால் 10 சதவீத டெஸ்லா பங்குகளை விற்பனை செய்யப்போவதாக டிவிட்டரில் தெரிவித்து அதற்கான முடிவை இணைய வாசிகளிடமே விட்டுவிட்டார். இதில் அதிகமானோர் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்தனர்.
82 லட்சம் பங்குகள் விற்பனை
இதை ஏற்ற எலான் மஸ்க் கடந்த வாரம் மட்டும் சுமார் 82 லட்சம் டெஸ்லா பங்குகளைச் சுமார் 8.8 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார். இந்தப் பங்கு விற்பனை மூலம் டெஸ்லா பங்கு மதிப்பு 1220 டாலரில் இருந்து 1000 டாலர் வரையில் சரிந்து நிறுவனத்தின் மதிப்பும், எலான் மஸ்க்-ன் சந்தை மதிப்பும் குறைந்துள்ளது.
டெஸ்லா வளர்ச்சி
டெஸ்லா கார்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இந்நிறுவனங்களின் தயாரிப்பு அளவு மட்டும் அல்லாமல் டெஸ்லா பங்கு விலையும் கடந்த 12 மாதத்தில் சுமார் 150 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ரிவியன் ஐபிஓ
இதேவேளையில் டெஸ்லா நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ரிவியன் ஐபிஓ வெளியிட்டு இதுவரை 120 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து மொத்த சந்தை மதிப்பு 153 பில்லியன் டாலராக உயர்ந்து தற்போது 138 மில்லியன் டாலர் அளவில் உள்ளது. ஆனால் டெஸ்லா பங்கு மதிப்புச் சரிந்தாலும் இதன் சந்தை மதிப்பு 1.032 டிரில்லியன் டாலர்.
ஆட்டோமொபைல்
டோயோட்டா, வோக்ஸ்வாகன், ரிவியன், டயாம்லர், ஜெனர்ல் மோட்டார்ஸ், லுசிட், போர்டு, BMW, ஸ்டெலான்டிஸ் ஆகிய 9 நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு தான் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு. புதன்கிழமை வர்த்தக முடிவில் டெஸ்லா பங்கு மதிப்பு 3.25 சதவீதம் அதிகரித்து 1,089.01 டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications