டிரம்ப் உடன் என்னதான் சண்டைப்போட்டாலும் எலான் மஸ்க், மேக் அமெரிக்கா கிரேட் அகைன் என்ற கொள்கையை தீவிரமாக பின்பற்றி வருகிறார். அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டு உதவிகளையே நம்பியிருக்கும் வேளையில் டெஸ்லா தனது கார்களுக்கு தேவையான அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதில் தீவிரமாக உள்ளார் எலான் மஸ்க்.
ஏற்கனவே எலான் மஸ்க் அமெரிக்காவில் விற்கப்படும் கார்களை அமெரிக்க மண்ணிலேயே தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்தக்கட்டமாக உதிரிபாகங்களை அமெரிக்க மண்ணில் தயாரிக்க துவங்கியுள்ளார். கடந்த சில வருடத்தில் இந்திய நிறுவனம் உட்பட உலகின் பல நாடுகளை சேர்ந்த உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்க மண்ணில் உற்பத்தி ஆலையை அமைத்துள்ளது. இதில் பெரும்பாலானவை டெஸ்லாவுக்காக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ள டெஸ்லா, தென்கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சிப்களை பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். இதன் மூலம் டெஸ்லா-வுக்கு தேவையான சிப்-களையும் இனி அமெரிக்க மண்ணில் தயாரிக்க உள்ளார்.
இந்த ஒப்பந்தம் சாம்சங் நிறுவனத்தின் இழப்பை எதிர்கொண்டு இருக்கும் கான்ட்ராக்ட் உற்பத்தி தொழிலை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் சாம்சாங் புதிதாக அமைத்து வரும் டெக்சாஸ் ஆலையின் முக்கியத்துவம் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் எலான் மஸ்க்-ன் டிவீட் மூலம் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் 4%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. எலான் மஸ்க் தனது X பதிவில், "சாம்சங் நிறுவனத்தின் புதிய டெக்ஸாஸ் ஆலை டெஸ்லாவின் அடுத்த தலைமுறை AI6 சிப்களை தயாரிக்க முழுவதுதமாக அர்ப்பணிக்கப்படும்." சாம்சங் தற்போது AI4 சிப்-களை தயாரித்து வருகிறது.
இதேபோல் தைவான் நாட்டின் TSMC நிறுவனம் AI5 சிப்-களை தைவான் நாட்டில் தயாரித்து வரும் நிலையில் விரைவில் இது அரிசோனா மாகணத்தில் இருக்கும் தொழிற்சாலைக்கு இதன் உற்பத்தி மாற்றப்படும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் "சாம்சங் டெஸ்லாவுக்கு உற்பத்தி திறனை அதிகப்படுத்த உதவுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம், ஏனெனில் நான் தனிப்பட்ட முறையில் இதை கண்காணித்து இத்தொழிற்சாலையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவேன். மேலும், இந்த ஆலை எனது வீட்டுக்கு அருகில் இருப்பது தனி சிறப்பு" என்று பதிவிட்டு உள்ளார்.
டெஸ்லா - சாம்சங் மத்தியிலான இந்த ஒப்பந்தம் 2033 வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது இரு நிறுவனங்களுக்கும் நீண்ட கால பலனை அளிக்கும். சாம்சங் முன்பு இந்த $16.5 பில்லியன் ஒப்பந்தத்தை அறிவித்தபோது வாடிக்கையாளரின் பெயரை வெளியிடவில்லை, ஏனெனில் இருதரப்பினரும் ரகசியம் காக்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர். தற்போது எலான் மஸ்கே இதுக்குறித்து அறிவித்த காரணத்தால் சாம்சங் பங்கு 6 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications