அமெரிக்கா: அமெரிக்காவில் சொந்தமாக வீடு வாங்கி தங்குபவர்களுக்கு சில நகரங்கள் ஊக்கத்தொகை கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பு தருகின்றன.
அமெரிக்காவின் சில நகரங்களில் காஸ்ட் ஆப் லிவிங் எனப்படும் வாழ்வினச் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் சில நகரங்கள் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக சொந்தமாக வீடு வாங்கி தங்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கன்சாஸ், ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் வீடு வாங்கி குடி வருபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்சாஸ் மாகாணத்தில் டோபேக்காவை தேர்ந்தெடு என்ற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த ந்கரில் வந்து சொந்தமாக வீடு வாங்கி குடி பெயரும் நபர்களுக்கு 15,000 டாலர்கள் ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது. டோபேக்கா கன்சாஸ் மாகாணத்தின் தலைநகரமாகும். இங்கே 1.25 லட்சம் பேர் தற்போது வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் டோபேக்காவை தேர்ந்தெடு என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

இந்த பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி குடி வருபவர்களுக்கு 15,000 டாலர்கள், இந்த பகுதியில் குறிப்பிட்ட காலம் வாடகைக்கு வீடு எடுத்து தங்குபவர்களுக்கு 10,000 டாலரும் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அதேபோல தல்சா என்பது 4 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாகும்.
இங்கே குடியிருந்து ரிமோட் முறையில் வேலை செய்பவர்களுக்கு 10000 டாலர்கள் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இதன்படி தல்சா நகருக்கு வரக்கூடியவர்கள் கடந்த ஓராண்டு காலம் வேறு நகரங்களில் தங்கி விட்டு புதிதாக தல்சா நகரத்திற்கு வந்து புதிதாக வீடு வாங்கி தங்க வேண்டும்.
இதுவரை சுமார் 3,000 பேர் இந்த திட்டத்தின் கீழ் தல்சா நகரத்திற்கு குடிபெயர்ந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக கொலம்பஸ், ஜார்ஜியா ஆகிய பகுதிகளிலும் ஜார்ஜியாவில் குடியேறுங்கள், கொலம்பஸ் குடியேறுங்கள் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது . முழு நேரமாக வீட்டிலிருந்து பணிபுரியக்கூடிய நபர்கள் இந்த பகுதிகளுக்கு குடிப்பெயரும் போது 5,000 டாலர்கள் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இதுநாள் வரை இந்த நகரங்களில் இருந்து 75 மைல்கள் தொலைவில் வசித்திருந்தவர்கள், தற்போது புதிதாக இங்கே குடிபெயர வேண்டும் என்பதே நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
அலபாமா மாகாணத்தின் சோல்ஸ் என்ற நகரமும் தங்கள் நகரத்தில் குடிபெயரும் நபர்களுக்கு 10000 டாலர்களை ஊக்கத்தொகையாக வழங்க முன் வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு அமெரிக்கர்களும் தற்போது ஊக்கத்தொகை அளிக்கும் நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்களாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications