சீனாவுக்கு சொந்தமான பிரபல வீடியோ பகிர்வு தளமான டிக் டாக் மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக 530 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான தரவு பாதுகாப்பு ஆணையம் டிக்டாக் செயலிக்கு இந்த அபராதத்தை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி டிக் டாக் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம் சீனாவுக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.

சமூக வலைத்தள செயலிகள் இந்த சட்டத்திற்கு இணங்கி தான் செயல்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சீனாவுக்கு சொந்தமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் டிக் டாக் செயலி பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தரவு பாதுகாப்பு ஆணையம் டிக்டாக் நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டிக் டாக் செயலி வாயிலாக சீனாவில் இருக்கும் நபர்களை சென்றடைந்ததாக தரவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். இது தங்களின் தரவு பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை மீறி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். டிக் டாக் இன் இந்த செயல்முறையை தங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு முன்பு நாங்கள் பல முறை எச்சரிக்கை விடுத்தும் டிக் டாக் செயலி ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டிக் டாக் செயலியை பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 159 மில்லியன் பயனாளர்களை கொண்டு இருக்கிறது . இந்த சூழலில் இந்த 159 மில்லியன் பயனாளர்களின் தரவுகளையும் பாதுகாப்பதற்கான அரசின் ஒழுங்கு முறைகளை ஏற்று அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் இதன் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் டிக் டாக் செயலி அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தனி நபர்களின் தரவு பாதுகாப்பை கண்காணிக்கும் அமைப்பாக dpc எனப்படும் எனப்படும் தரவு பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையும் டிக் டாக் செயலி ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தகவல்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் இருக்கும் சர்வர்களில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்றும் சீனாவில் இருக்கும் சர்வர்களில் அனுப்பி வைக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இதே போல குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக டிக் டாக் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தை சேர்ந்த ஒழுங்குமுறை அமைப்பு 345 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்தது.


Click it and Unblock the Notifications