அமெரிக்கச் சமுக ஊடக துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக விளங்கும் டிக் டாக்-கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு புதிய பிரச்சனை வெடித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா - சீனா மத்தியில் வர்த்தக போர் மோசமான நிலையில் எட்டியிருக்கும் வேளையில், இந்த வருட இறுதியில் நடக்கும் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வரும் வேளையில் டிக் டாக் செயலிக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டதா என்ற கேள்வி அமெரிக்க நீதித்துறையின் கருத்தால் எழுந்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பைட்டான்ஸ்-ன் செயலியான டிக் டாக், அமெரிக்கப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, அதனைச் சீன அரசுக்குப் பகிர்ந்து கொள்ளும் அபாயம் உள்ளதால், இது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என குற்றம் சாட்டியுள்ளது.

டிக் டாக் தொடர்பாக பல வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இதில் மிகவும் முக்கியமாகத் தகவல் திருட்டு மற்றும் தகவல் பகிர்வு குறித்த குற்றச்சாட்டுகள் தான். இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்கும் வேளையில் அமெரிக்க நீதித்துறை முக்கியமான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இதில், டிக்-டாக் செயலி அமெரிக்கப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சீனாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் எனவும், அதுமட்டுமின்றி அமெரிக்க மக்கள் பார்க்கும் கன்டென்ட்-ஐ சீனா கட்டுப்படுத்தும் அபாயமும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட சட்டத்தின்படி, வரும் ஜனவரி 19-ஆம் தேதிக்குள் பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக்-ன் தனது அமெரிக்க வர்த்தகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்யாவிட்டால், அந்த செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக டிக்-டாக் மற்றும் அதன் கன்டென்ட் கிரியேட்டர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்குத்தான் அமெரிக்க நீதித்துறை தற்போது பதிலளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் முடிவு என்னவாகும் என்பதைப் பொறுத்தே டிக் டாக்-கின் எதிர்காலம் அமெரிக்காவில் அமையும்.


Click it and Unblock the Notifications