பல ஆண்டுகளாக உலக அளவில் நீடித்து வரும் முக்கியமான ஒரு போர் காசா போர். ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் மத்தியில் நடந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரை இழந்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் காசா போரில் முக்கிய திருப்பமாக அதிபர் டிரம்ப் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸ் அமைப்பும் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகின்றன. திடீரென சண்டை தீவிரமாகும் பின்னர் போர் நிறுத்தம் வந்து அமைதி ஏற்படும் ஆனால் சில மாதங்களிலேயே மீண்டும் சண்டை தொடங்கி விடும். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தரப்பில் ஒரு அமைதி வாரியம் அமைக்கப்பட்டது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளியிட்டுள்ள பதிவில் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு மற்றும் பிற ஆயுதமேந்திய குழுக்கள் முழுமையாக ஆயுதங்களை கைவிடுவதற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது காசாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஆயுதங்களை கைவிடும் நடவடிக்கைகள் அனைத்தும் முன்னரே திட்டமிட்டபடி மிக கவனமாக செயல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஆயுதங்கள் முழுமையாக கைவிடப்பட்டதும், இஸ்ரேல் படைகள் அங்கிருந்து வெளியேறும். அதற்கு பதிலாக, சர்வதேச படை மற்றும் புதிய பாலஸ்தீனிய காவல் படை இணைந்து காசாவின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கும் என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக குண்டு சத்தங்களுக்கு மத்தியில் இருந்த காசா மக்களுக்கு இது அமைதியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காசாவை ஆளும் அதிகாரம், ஒரு புதிய பாலஸ்தீனிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும். இந்த அரசாங்கம் அமெரிக்காவின் அமைதி வாரியத்துடன் இணைந்து பாலஸ்தீனிய மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடும் என கூறியுள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த உதவிய எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள டிரம்ப் , ஓராண்டுக்கு முன்பு போர், பிணைக்கைதிகள் என நிலைகுலைந்து காணப்பட்ட காசா இப்போது அமைதிய நோக்கி திரும்பி இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹமாஸ் தரப்பிலும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் இதில் கையெழுத்திட்டால் தான் முழுமை பெறும் என கூறியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் தரப்பில் , ஹமாஸ் உண்மையிலேயே ஆயுதங்களை களைந்துவிடுமா என்பதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறதாம்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கான நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவில் அமைதியை நோக்கிய பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications

