அமெரிக்காவின் இடைக்கால தேர்தல்களில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையிலும் செனட் சபையிலும் ஆதிக்கம் பெற்றுள்ளன. டிரம்ப் நிர்வாகத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
தேர்தல் தோல்வியை தொடர்ந்து டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முக்கிய பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஹெக்சேத் ஆகிய இருவரும் டிரம்புக்கு இரு கரங்களாக செயல்பட்டவர்கள். ஆனால் தேர்தல் தோல்வியால் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேற இவர்கள் முடிவு செய்துள்ளதக தகவல் வெளியாகின.

ஈரான் போர், வெனிசுலா மீதான ராணுவ நடவடிக்கை என டிரம்பின் அனைத்து முடிவுகளுக்கும் துணை நின்று பணியாற்றியவர்கள் தான் அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ஹெக்சேத். இவர்கள் பதவியை ராஜினாமா செய்து டிரம்ப் நிர்வாகத்தை விட்டு வெளியேறினால் அது டிரம்புக்கு பேரதிர்ச்சியை தரும்.
இவர்களில் மார்கோ ரூபியோ டிரம்பின் நிர்வாகத்திலிருந்து விலகி, 2028 ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்க திட்டமிடுவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இந்த தகவல்களை மார்கோ ரூபியோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை அவருடன் இணைந்து பணியாற்றுவதே எனது நீண்டகால திட்டம், 2028 தேர்தல் பற்றி நான் யோசிக்கவே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் வெள்ளை மாளிகையும் இவை வெறும் வதந்திகள் என கூறியுள்ளது. இருந்தாலும் ஈரான் போரை கையாண்ட விதத்தை முன் வைத்து பாதுகப்பு துறை அமைச்சர் ஹெக்செத்தை பதவிநீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையில் முன்னெடுக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் டிரம்ப் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுப்பார் ஏனெனில் ஹெக்செத் தான் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் அமைச்சரவையிலோ நிர்வாகத்திலோ எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் குடியரசு கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் இல்லாமலேயே களம் காணும் முதல் அதிபர் தேர்தலாக இது இருக்க போகிறது. தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குடியரசு கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னணி நபராக கருதப்படுகிறார். இருப்பினும், மார்கோ ரூபியோவும் குடியரசு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுவதால், எதிர்கால தேர்தல் போட்டியில் இவரும் ஒரு பலத்த போட்டியாளராக இருப்பார் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

