அமெரிக்க அதிபராக பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை தள்ளி வைத்திருக்கிறார். ஜனவரி 19ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு முழுவதுமாக தடை விதிக்கும் சட்டத்தை முன்னாள் அதிபர் ஜோபாயுடன் தலைமையிலான நிர்வாகம் அமல்படுத்தியது. இந்த நிலையில் அதிபராக பதவி ஏற்றவுடன் இந்த தடையை தற்காலிகமாக தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார் டிரம்ப்.
இதன்படி டிக் டாக் செயலியின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அரசு 75 நாட்கள் கால அவகாசம் தந்திருக்கிறது. இந்த 75 நாட்களுக்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயலியின் 50 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டால், வழக்கம்போல டிக் டாக் செயலி அமெரிக்காவில் செயல்பட அனுமதி வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

சீனாவை தலைமை இடமாக கொண்ட பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் செயலி அமெரிக்காவில் மிகவும் பிரபலமான ஒரு சமூக ஊடகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் பரவலாக பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக டிக் டாக் திகழ்ந்து வருகிறது. ஆனால் டிக் டாக் செயலி வாயிலாக அமெரிக்கர்களின் தகவல்களை சீனா திருடுவதாகவும் உளவு பார்ப்பதாகவும் இது அமெரிக்க பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிறது என்றும் கூறி கடந்த ஆண்டு ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு அனுமதி பெற்றது.
கடந்த 19ஆம் தேதியிலிருந்து இந்த சட்டம் அமலுக்கு வந்தது. 19ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவில் டிக் டாக் செயலியை யாராலும் பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற உடனே அந்த தடையை விலக்கி டிக் டாக் செயலி அடுத்த 75 நாட்களுக்கு அமெரிக்காவில் செயல்படும் என்றும் அதற்குள் நிறுவன பங்குகளை விற்பதா அல்லது பல லட்சம் பயனாளர்களை இழப்பதா என்ற முடிவை பைட்டான்ஸ் எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பெரும்பாலான இளைஞர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர் என்றும் தன்னுடைய தேர்தல் பரப்புரையின் போது பெரும்பாலான இளம் வாக்காளர்களை சென்று சேர டிக் டாக் செயலி தனக்கு உதவியானதாக இருந்தது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து அமெரிக்காவில் மீண்டும் டிக் டாக் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
டிக் டாக் செயலி" உங்களின் ஆதரவுக்கு நன்றி அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளால் டிக் டாக் செயலி மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது " என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மெசேஜ் அனுப்பி வருகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை 170 மில்லியன் பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். திடீரென இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications