அமெரிக்க அதிபர் டொனால்ட் கடந்த ஓராண்டு காலமாகவே அவ்வப்போது ஏதேனும் ஒரு நாட்டிற்கு இறக்குமதி வரியை உயர்த்துவதாக மிரட்டல் விடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதுவும் அண்மைக்காலமாக தினம் தோறும் ஒரு நாட்டுக்கு அவர் வரி மிரட்டல் விடுத்து வருகிறார்.
தினமும் ஏதேனும் ஒரு நாட்டை மிரட்டவில்லை என்றால் இவருக்கு தூக்கமே வராதோ என அனைவரும் பேசும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டை குறி வைத்து அச்சுறுத்துகிறார். அதிகபட்ச வரி விதிப்போம் என மிரட்டல் விடுத்து நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம் என்ற டிரம்பின் உத்தி தான் இது. இந்த முறை அவர் குறி வைத்திருப்பது கனடாவை.

அமெரிக்காவில் விற்கப்படும் கனடா நாட்டு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிப்போம் என டிரம்ப் மிரட்டி இருக்கிறார். ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்திற்கும் கனடா அரசாங்கத்திற்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடிக்கின்றன. கனடாவும், சீனாவும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா நாட்டு பொருட்களுக்கு 100% வரி விதிப்பேன் என கடந்த வாரம் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் எந்த வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்ற விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை.
ஆனால் கனடாவுக்கும் சீனாவுக்கும் வர்த்தக ஒப்பந்தம் என்பது ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் கனடாவில் தயாரிக்கும் விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என புதிய மிரட்டலை விடுத்திருக்கிறார். இதுவரை உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட விமானங்களில் ஒன்றான கல்ஃப்ஸ்ட்ரீம் 500 மற்றும் 800 ஜெட் விமானங்களுக்கு கனடா தவறான முறையில் சட்டவிரோதமாக சான்றிதழ் வழங்க மறுத்து வருகிறது எனக் கூறியிருக்கும் டிரம்ப், ஒரு சிறந்த அமெரிக்க நிறுவனமான கல்ஃப்ஸ்ட்ரீமுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய சான்றிதழ் வழங்கப்படும் வரை நாங்கள் கனடாவின் குளோபல் எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கும், கனடாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து விமானங்களும் வழங்கும் சான்றிதழை ரத்து செய்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலைமையை உடனடியாக சரி செய்யாவிட்டால் அமெரிக்காவிற்கு விற்கப்படும் கனடாவின் அனைத்து விமானங்களுக்கும் 50 சதவீத வரியை விதிக்கப் போகிறேன் என டிரம்ப் கூறியிருக்கிறார். தற்போது அமெரிக்கா - மெக்சிகோ -கனடா முத்தரப்பு வர்த்தக ஒப்பந்தம் அமலில் இருப்பதால் கனடா நாட்டுப் பொருட்களுக்கு பெரிய அளவிலான வரி விதிக்கப்படுவதில்லை.
ஆனால் அண்மை காலமாக கனடா நாட்டு அரசு, அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரான செயல்படுவதாக கூறியிருக்கும் அமெரிக்க அமைச்சர் பெசன்ட் கனடா அரசு தொடர்ந்து இதே நடவடிக்கையில் ஈடுபட்டால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications