அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்திய ரெசிப்ரோக்கல் வரிகளை செல்லாது என அறிவித்துள்ளது. இது அமெரிக்க வர்த்தக கொள்கையில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சி தலைவரான டிரம்புக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில் 6-3 என்ற வாக்கு வித்தியாசத்தில் நீதிபதிகள் இந்த முடிவை எடுத்தனர். தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் எழுதிய தீர்ப்பில், 1977ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தை பயன்படுத்தி உலகளாவிய அளவில் சுங்கவரி விதிப்பது அதிபரின் அதிகார வரம்பை மீறியது என தெளிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் கீழ்நிலை நீதிமன்ற தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது, டிரம்ப் அரசின் மேல்முறையீட்டுக்கு முட்டுக்கட்டை போட்டு உள்ளது. இந்த தீர்ப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் வரவேற்றுள்ளது.

கனடா:
அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பை கனடா தான் முதல் முறையாக வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. கனடாவுக்கு சில பொருட்களுக்கு 35% வரை வரி விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அமெரிக்கா-கனடா-மெக்சிகோ இடையிலான USMCA ஒப்பந்தத்தின் கீழ் பல பொருட்கள் விலக்கு பெற்றிருந்தன. இதோடு உலோகங்களுக்கு 50% வரியும், அமெரிக்காவில் தயாரிக்கப்படாத கார்களுக்கு 25% வரியும் அமலில் இருந்தது. அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்த வரிகள் "நியாயமற்றவை" என்பதை உறுதி செய்கிறது என கனடா தெரிவித்துள்ளது.
பிரிட்டன்:
பிரிட்டன் அரசு இந்த தீர்ப்பை கவனமாக ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. ரெசிப்ரோக்கல் வரி விதிப்பில் பிரிட்டனுக்கு 10% அடிப்படை சுங்கவரி விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து தீர்ப்பின் விளைவுகளை ஆய்வு செய்து செயல்படுவோம் என பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம்:
ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்ப்பை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 15% சுங்கவரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்த ஒப்பந்தத்தின் நடைமுறைக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து:
சுவிட்சர்லாந்து ஜனவரி மாதத்தில், சுவிஸ் இறக்குமதிகளுக்கு 39% வரை இருந்த வரியை 15% ஆகக் குறைக்க ஒப்புதல் கிடைத்ததாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் தேவையானால் மீண்டும் அதிகரிக்கலாம் என அவர் எச்சரித்திருந்தார். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் புதிய திசையை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உலக வர்த்தக சூழ்நிலைக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இந்தியா தரப்பில் இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இந்த தீர்ப்பு இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தக ஒப்பந்த்தை தலைகீழாக மாற்றும் என்ற கருத்து நிலவுகிறது.


Click it and Unblock the Notifications