அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் போட்டி வரி விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் இது தொடர்பான ஆவணங்களை அணுகியதாக குறிப்பிட்டு இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கிக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என கூறியிருந்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் அமெரிக்க விஸ்கிக்கான வரியை உயர்த்தினால் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட பொருட்களுக்கு நாங்கள் 200 சதவீத வரி விதிப்போம் என கூறியிருந்தது.

ஐரோப்பாவை சேர்ந்த வைன் தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவில் அமெரிக்காவை சார்ந்திருப்பதால் அவற்றின் வருமானம் பாதிக்கும் என கருதி தற்போதைக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் விஸ்கி உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தும் அறிவிப்பை தற்காலிகமாக தள்ளி வைத்திருக்கிறது. இருந்தாலும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்திருக்கிறது.
இதன்படி வைரம், மோட்டார் சைக்கிள்கள், படகுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், புகையிலை பொருட்கள் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படக்கூடிய உயிரினங்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்த ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் முடிவு செய்துள்ளது. பல பொருட்களுக்கு 25 சதவீத வரியும் , குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கூடிய விரைவில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் இறக்குமதி வரி உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தெரிகிறது. வரும் ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்தே சில அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது.
பாதாம், உள்ளிட்ட நட்ஸ்களுக்கான வரி டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீத வரியை விதித்தார். இந்த வரி விதிப்பு நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தான் அமெரிக்காவின் சில பொருட்களுக்கான வரியை உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ரீதியிலான மோதல்கள் இருந்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டிலேயே அமெரிக்கஅதிபராக டிரம்ப் இருந்தபோது ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தினார்.
இதற்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கிக்கு 25 சதவீத வரியை விதித்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வரிவிதிப்பு நடவடிக்கைகளை திரும்ப பெற்றுக் கொண்டன.


Click it and Unblock the Notifications