சிலிக்கான் வேலிக்கும் அமெரிக்க அரசுக்கும் பாலமாக இருந்த எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான நட்பு தற்போது வெடித்து சுக்குநூறாகி உள்ளது. டிரம்ப் 2வது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் பண உதவி மட்டும் அல்லாமல் தனது சுமுக வலைத்தளத்தை ஒரு பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்த வழிவிட்டார் எலான் மஸ்க்.
இதுமட்டும் அல்லாமல் டிரம்ப்-ன் மொத்த குடும்பமும் எலான் மஸ்க்-ஐ அங்கிள் என கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாகினர். இதுமட்டும் அல்லாமல் மஸ்கி-ன் கடைக்குட்டி X Æ A-12 டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் விளையாடுவது முதல் ஓவல் அலுவலகத்தில் ஜாலியாக சுற்றுவது வரையில் இருவரும் நெருக்கமாகினர்.

இந்த நிலையில் பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக எலான் மஸ்க் அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட DOGE அமைப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமைதியாக வெளியேறினார். இதன் பின்பு டிவிட்டரில் படு ஆக்டிவ் ஆக மாறிய எலான் மஸ்க் வியாழக்கிழமை அடுத்தடுத்து தனது டிவீட்டால் குண்டு மழை பொழிந்தார். எலான் மஸ்க்-ன் அடுத்தடுத்த டிவீட்டால் தற்போது டிரம்ப் 1-2 வருடத்தில் ஆட்சியை இழக்கப்போகிறார் என்பது வரையில் சமுக வலைத்தளத்தில் விவாதம் வெடித்துள்ளது.
அமெரிக்காவில் ரெசிஷன்: டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரிக் கொள்கைகள் மூலம் 2025-ன் இரண்டாம் பாதியில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மந்தநிலையை ஏற்பட்டு ரெசிஷனுக்குள் நுழையும் என எலான் மஸ்க் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு மூலம் எச்சரித்துள்ளார். அமெரிக்கப் பொருளாதாரத்தையும், நிதி நிலையை மேம்படுத்தவே DOGE அமைப்பில் எலான் மஸ்க் தீவிரமாக பணியாற்றி வந்தார், ஆனால் நடந்தது வேறு என்பதால் டிவிட்டரில் எலான் மஸ்க் கொந்தளித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே "ஜீரோ வரி" கொள்கையும், இரு நாடுகள் மத்தியில் ஃப்ரீ டிரேட் மண்டலத்தை உருவாக்க வேண்டும் என எலான் மஸ்க் ஏப்ரல் மாத துவக்கத்தில் அறிவித்தார். ஆனால், இதை எதுவுமே டிரம்ப் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஐரோப்பாவுக்கு எதிராக வரியைத் தனது விடுதலை நாள் கொள்கையில் டிரம்ப் அறிவித்தார். இதை மஸ்க் கடுமையாக எதிர்த்தார், இதற்கு முன்பே எலான் மஸ்க்- டிரம்ப் மத்தியிலான நட்புக்கு விரிசல் விழுந்தது எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மானியத்தைக் குறைப்பதாக டிரம்ப் அறிவித்தது மூலம் முதல் விரிசல் ஏற்பட்டது.
டிரம்பின் மசோதாவை கலாய்த்த மஸ்க்: எலான் மஸ்க், டிவிட்டரில் டிரம்பின் "பெரிய அழகான மசோதா (big beautiful bill)" என்று அழைக்கப்படும் சட்ட மசோதாவை "வெறுக்கத்தக்க" மற்றும் "பயனற்ற செலவுகள் நிறைந்தவை" என விமர்சித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக, X தளத்தில் அவர் செனட் குடியரசுக் கட்சியினரை இந்த மசோதாவைத் தடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார். இது டிரம்ப்-ஐ கோபமடையச் செய்துள்ளது.
டிரம்ப் பதவி நீக்கம்: இதோடு நிற்காத எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கக் கோரிக்கையை ஆதரிக்கும் X பதிவுக்கு, "ஆம்" என பதிலளித்து அமெரிக்க அரசியலைத் தடுமாறச் செய்துள்ளார். இதோடு டிரம்ப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு துணை அதிபருமான ஜே.டி.வான்ஸ்-ஐ அதிபராக்க வேண்டும் என்றும் மஸ்க் ஆதரித்தார்.
எப்ஸ்டீன் விவகாரம்: எல்லாவற்றுக்கும் மேலாக எலான் மஸ்க் தனது X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பே இது தான். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் விவகாரத்தில் தொடர்பில் உள்ளார் என்ற அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் "டிரம்ப் எப்ஸ்டீன் பைல்-ஸ் உள்ளார். அதனால் தான் அவை பகிரங்கமாக மக்கள் மத்தியில் வெளியிடப்படவில்லை," என எலான் மஸ்க் பதிவிட்டார். இது, டிரம்ப் தனது 'பிக் பியூட்டிஃபுல் பில்' எதிர்ப்பதாக எலான் மஸ்கை விமர்சித்த ஒரு மணி நேரத்தில் எலான் மஸ்க் வெளியிட்டார். "எதிர்காலத்தில் இந்த பதிவைக் கவனியுங்கள். உண்மை வெளிவரும்," என எலான் மஸ்க் குறிப்பிட்டு மேலும் அதிரடியைக் கிளப்பினார்.
யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒரு பாலியல் குற்றவாளியாகவும், சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியவர் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர். 2005இல், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புளோரிடா காவல்துறையால் முதல் முறையாக விசாரிக்கப்பட்டார். இந்த விசாரணையில், 36 சிறுமிகளை (இதில் சிலர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள்) பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது உறுதியானது.
ஆனால் 2008இல் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் குற்றவாளியாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் அறிவிக்கப்பட்டு 13 மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்தார். இதன் பின்பு 2019இல், நியூயார்க் மற்றும் புளோரிடாவில் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்டார் ஜெஃப்ரி எப்ஸ்டீன். ஆனால், விசாரணையின்போது, ஆகஸ்ட் 2019இல் அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார், இதனால் வழக்கு முடிவுக்கு வந்தது. சரி இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்-க்கும் டொனால்டு டிரம்ப்-க்கும் என்ன தொடர்பு..?
டிரம்ப்- ஜெஃப்ரி எப்ஸ்டீன்: டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இருவரும் 1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் இருவரும் சோஷியல் கான்டெக்ட் உடன் இருந்தாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் மார்-எ-லாகோ (Mar-a-Lago) உட்பட பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாகப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக, 1992 இல் மார்-எ-லாகோவில் நடந்த ஒரு விருந்தில் அவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். 2002 ஆம் ஆண்டில் நியூயார்க் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் எப்ஸ்டீனைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நான் ஜெஃப்பை பதினைந்து ஆண்டுகளாக அறிவேன். அற்புதமான மனிதர்." என்று கூறினார்.
இவர்கள் இருவரும் இருந்த வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்ட நிலையில் அதற்கு எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார்.

எப்ஸ்டீனின் கான்டெக்ட் லிஸ்ட் மற்றும் அவரது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் (மறைமுகமாக "லொலிதா எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும்) விமானப் பதிவுகளிலும் டிரம்ப்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் தலைகளின் நெட்வொர்க்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்த குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அவரது நெட்வொர்க் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. 2019 இல் எப்ஸ்டீன் சிறையில் இறந்த பிறகு, இந்த வழக்கைச் சுற்றியுள்ள மர்மங்கள் அதிகரித்தன. காரணம் இந்த பெரும் புள்ளிகள் சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தியிருக்கலாம் அல்லது ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இணைந்து பணியாற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் தான் இத்தகைய பதற்றத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.
மேலும் எப்ஸ்டீன் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி, பெரும் புள்ளிகளையும், அரசியல் மற்றும் திரைத்துறை பிரமுகர்களை பாலியல் ரீதியான செயல்களில் சிக்க வைத்து, பின்னர் அவர்களை மிரட்டி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுவும் அவருடைய மறைவுக்குப் பின்பு விசாரணை செய்யாத காரணத்தால் உண்மை வெளியில் வரவில்லை.
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன?: எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொழில் ஈடுபடுத்தியது தொடர்பான விசாரணையில் கிடைத்த ஆவணங்கள், கான்டெக்ட் லிஸ்ட், கால் ரெக்கார்டிங், சாட் மெசேஜ், வீடியோக்கள், மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு விசாரணை தரவுகளை உள்ளடக்கியவை.
அமெரிக்க அரசு வெளியிட்ட ஆவணம்: பிப்ரவரி 2025இல், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணம் ஒன்றில், டொனால்ட் டிரம்ப், மைக்கேல் ஜாக்சன், அலெக் பால்ட்வின், ஹார்வி வைன்ஸ்டீன், மற்றும் டிரம்பின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரின் பெயர்கள் எப்ஸ்டீனின் கான்டெக்ட் லிஸ்டில் இருப்பது தெரியவந்தது. மேலும், 254 மசாஜ் செய்பவர்களின் பெயர்களை பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் மறைக்கப்பட்டது.
எப்ஸ்டீனின் "பிளாக் புக்" எனப்படும் தொலைப்பேசி எண் புத்தகத்திலும் டிரம்ப்பின் பெயர் இடம்பெற்றிருந்தது. எப்ஸ்டீன் கான்டெக்ட் லிஸ்ட் தவிர, விசாரணையின் மற்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
டிரம்பின் பெயர் இந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் உள்ளதால், அவை வெளியிடப்படவில்லை என எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டை உண்மை என நிரூபணம் செய்ய எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. இருப்பினும், "உண்மை வெளிவரும்" என எலான் மஸ்க் தனது பதிவில் உறுதியளித்துள்ளார், இது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications