இடைக்கால தேர்தல் முடிவுகளில் பின்னடைவு கிடைத்ததால் டிரம்ப் சில காலம் ஈரான் விவகாரத்தில் மௌனம் காட்டுவார், தீவிர போர்களில் ஈடுபட மாட்டார் என கூறப்பட்ட நிலையில் திடீரென அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்திற்கு மிக முக்கியமான கடல் வழியில் அமைந்துள்ள Qeshm தீவின் சுசா பகுதியில் இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே ஃபுளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் மீது சிறிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என கூறினார். ஈரான் வான் பாதுகாப்பு சாதனத்தை தயார் செய்து வைத்திருந்தது, அதனை நாம் தகர்த்து அழித்துவிட்டோம் என டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை கெஷ்ம் மற்றும் ஹெங்கம் தீவுகளில் அமெரிக்கா இதே போல தாக்குதல் நடத்தியது.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு மக்களிடையே பலத்த அடி விழுந்தது. இதற்கு ஈரான் போர் தான் காரணம் என டிரம்பே ஒப்பு கொண்டார். இந்த தேர்தல் தோல்விகளால் டிரம்ப் ஈரான் விவகாரத்தில் தீவிரம் காட்டாமல் சிறிது காலம் அமைதி காப்பார் என சொல்லப்பட்ட நிலையில் ஈரான் மீது இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.
தேர்தலில் கிடைத்த அதிர்ச்சி தோல்விக்கு பின், டிரம்ப் ஈரான் விவகாரத்தில் மாறி மாறி பேசுவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. ஈரானை "அழித்து விடுவேன்" என அச்சுறுத்துவதும், அதே வேளையில் போருக்கான தீர்வு நெருங்கிவிட்டது , பேச்சுவார்த்தை சிறப்பாக நடக்கிறது என கூறுவதுமாக டிரம்பின் பேச்சு குழப்பமடைய வைக்கிறது.
இதற்கிடையே, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்களை தீர்க்கும் வகையில் கத்தார் மத்தியஸ்தம் செய்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதற்காக கத்தார் வழங்கிய புதிய முன்மொழிவுகளை ஈரான் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருந்தாலும், ஈரான் தனது முதன்மையான கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை ஒரு உறுதியாக ஒப்பந்தத்திற்கு வராது என்றே சொல்லப்படுகிறது. தேர்தல் தோல்வியில் இருக்கும் டிரம்ப் இந்த முறையாவது விட்டு கொடுப்பாரா இல்லை பிடிவாதத்துடன் ஈரான் போரை தொடர்வாரா என்பது இனி வரும் நாட்களீல் தான் தெரியவரும்.
ஈரான் போர் 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதற்கு ராணுவதாக்குதல் முடிவு கட்டாத நிலையில் பேச்சுவார்த்தை தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற சூழல் உண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

