அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடும்ப வர்த்தக சாம்ராஜ்ஜியமான டிரம்ப் ஆர்கனைசேஷன், T1 மொபைல் என்ற புதிய ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்க தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சார காலத்தில் வாட்ச் முதல் பைபிள் வரையில் பல பொருட்களை விற்பனை செய்து பெரும் பணத்தை திரட்டிய நிலையில், அதிபரான பின்பு 2 கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்து பல கோடிகளை அள்ளினார், இதை தொடர்ந்து அமெரிக்க டெலிகாம் சந்தையில் இறங்கியுள்ளார். டிரம்ப் ஆர்கனைசேஷன் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் டெலிகாம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க சந்தையில் வெறும் 499 டாலர் விலையில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த T1 ஸ்மார்ட்போன், "அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டது" என்று விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த உற்பத்தி குறித்து சமுக வலைத்தளத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
T1 மொபைல் ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:
T1 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தில் இயங்குகிறது.
ஸ்கிரீன்: 6.8 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz புதுப்பிப்பு விகிதம்.
கேமரா: 50MP ப்ரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா.
பேட்டரி: 5000mAh, 20W வேகமான சார்ஜிங்.
மெமரி: 12GB RAM, 256GB ஸ்டோரேஜ்.
பாதுகாப்பு: கைரேகை சென்சார் மற்றும் AI பேஸ் ஆதென்டிகேஷன்.
இந்த ஃபோன் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டு, பின்புறத்தில் அமெரிக்கக் கொடி மற்றும் "T1" என பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை $499 (சுமார் ரூ.43,096) ஆகும், மேலும் $100 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம். இந்த ஃபோன் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2025-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
T1 மொபைலை உற்பத்தி செய்யும் நிறுவனம் எது?
டிரம்ப் ஆர்கனைசேஷன், T1 ஸ்மார்ட்போனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை. T1 மொபைல் LLC என்ற நிறுவனம், டிரம்ப் பெயரை உரிமம் மூலம் பயன்படுத்தி இந்த ஃபோனை உற்பத்தி செய்கிறது. டிரம்ப் ஆர்கனைசேஷன், இந்த ஃபோனின் வடிவமைப்பு, உற்பத்தி அல்லது விநியோகத்தில் நேரடியாக ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஆனால், "அமெரிக்காவில் உற்பத்தி" செய்யப்பட்டது என கூறப்படவது பல நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் உற்பத்திக்கு தேவையான உள்கட்டமைப்பு மிகக் குறைவாக உள்ளது. ஒரே ஒரு அமெரிக்க ஸ்மார்ட்போனான ப்யூரிசத்தின் லிபர்ட்டி ஃபோன் (Purism's Liberty Phone), $1,999 விலையில் விற்பனையாகிறது. இதனால், $499 விலையில் T1 ஃபோனை அமெரிக்காவில் உற்பத்தி செய்வது "மிகவும் சவாலானது" என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த ஃபோன் சீனாவைச் சேர்ந்த லக்ஸ்ஷேர் (Luxshare) போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படலாம் என்று சிலர் கூறிவருகின்றனர். இந்த நிறுவனம் ஆப்பிளின் ஐபோன்களை உற்பத்தி செய்யும் அதே நிறுவனமாகும்.
டிரம்ப் மொபைல் டெலிகாம் சேவை:
டிரம்ப் மொபைல் பெயரில் புதிய டெலிகாம் சேவையை டிரம்ப் ஆர்கனைசேஷன் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது ஒரு மொபைல் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டராக (MVNO) செயல்படுகிறது, இது அமெரிக்காவின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான AT&T, வெரிசான் மற்றும் T-மொபைலின் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகிறது.
டிரம்ப் மொபைல் நிறுவனத்தின் முதன்மை சேவை, "47 திட்டம்" என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் இருக்கும் காரணத்தால் இதை மையமாக வைத்து 47 என்ற பிளான் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் மாதத்திற்கு $47.45 விலையில் வழங்கப்படுகிறது. இந்த விலை, டொனால்ட் டிரம்பின் 45வது மற்றும் 47வது அதிபர் பதவிகளைக் குறிக்கிறது.
இந்த சேவையில் என்ன கிடைக்கும்:
வரம்பற்ற அழைப்பு, சாட் மற்றும் டேட்டா (20GB-க்கு பிறகு வேகம் குறையலாம்).
24/7 அமெரிக்க அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவை.
100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவச சர்வதேச அழைப்பு.
டாக்டிகிரிட்டி செயலி மூலம் டெலிமெடிசின் சேவைகள்.
டிரைவ் அமெரிக்கா மூலம் 24/7 சாலையோர உதவி.
டிரம்ப் மொபைல், அமெரிக்க தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு புதிய வீரராக நுழைந்துள்ளது. இதன் வெற்றி, டிரம்ப் பிராண்டின் அரசியல் செல்வாக்கைப் பொறுத்தது.


Click it and Unblock the Notifications