அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தி லாபம் பார்க்கிறார் என தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக டிரேடிங் எனப்படும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு அவர் பெரும் பணம் பார்ப்பதாக சொல்லப்படும் நிலையில் ஜூன் மாதம் அவரது டிரேடிங் விவரங்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் கடந்த ஜூன் மாதத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெர்க்ஷயர் ஹாத்வே, விசா, மாஸ்டர்கார்டு, பலாண்டீர், மெட்டா ,காயின்பேஸ் , ஹோம் டெப்போ போன்ற நிறுவனங்களில் அதிக பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜூன் மாதத்தில் டிரம்ப் மேற்கொண்ட வர்த்தகங்களின் மதிப்பு 78.1 மில்லியன் டாலர் முதல் 263.1 மில்லியன் டாலர் வரை இருக்கும் என ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது.

சாப்ட்வேர் நிறுவனமான பலாண்டீர் நிறுவனப் பங்குகளை ஜூன் 3 அன்று சிறிதளவு வாங்கிய அவர், ஜூன் 16 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளில் பெரிய அளவில் விற்பனை செய்துள்ளார். இதற்கிடையில், ஜூன் 14 அன்று அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, ஜூன் 23 மற்றும் ஜூன் 24 ஆகிய தேதிகளில் மீண்டும் பலாண்டீர் பங்குகளை வாங்கியுள்ளார்.
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் 1 மில்லியன் டாலர் முதல் 5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வாங்கிய டிரம்ப் அதன் பிறகு 6 நாட்கள் கழித்து சிறிய அளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார். அதே போல மெட்டா பங்குகளை விற்று பின்னர் வாங்கியுள்ளார். அதிகபட்சமாக ஜூன் 22 அன்று வாண்கார்ட் குரூப் ஈ.டி.எப்-இல் 5 மில்லியன் டாலர் முதல் 25 மில்லியன் டாலர் வரை விற்பனை செய்துள்ளார்.
டிரம்ப் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்தே இந்த வர்த்தகங்களும் நடந்துள்ளன. ஒரே நாளில் ஒரே பங்கை வாங்கியும் விற்ற நிகழ்வுகளும் இந்த நிதி அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. இதனால் இன்சைடர் டிரேடிங் நடக்கிறதா என சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது முன் கூட்டியே அரசின் அறிவிப்புகளை அவர் தனது நிறுவனத்திற்கு கசிய விடுகிறாரா அதனை வைத்து டிரேடிங் செய்து லாபம் பார்க்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டொனால்டு டிரம்ப் ஒரு நாட்டின் அதிபராகவும் அதே நேரத்தில் தீவிர முதலீட்டாளராகவும் இருப்பதால் இந்த அறிக்கைகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இருப்பினும், அவரது முதலீடுகள் தனித்து நிர்வகிக்கப்படுவதால் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை என வெள்ளை மாளிகை விளக்கம் தருகிறது.
டிரம்ப் அமைப்பின் நிர்வாக துணை தலைவர் எரிக் ட்ரம்ப், இந்த சொத்துகளை Blind trust முறையில் பராமரிக்கப்படுவதாக கூறுகிறார். அதிபர் டிரம்போ அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவரோ, போர்ட்ஃபோலியோ எவ்வாறு முதலீடு செய்யப்பட வேண்டும் அல்லது எப்போது பங்குகள் வாங்கப்பட வேண்டும் அல்லது விற்கப்பட வேண்டும் என்பதில் எத்தகைய தலையீடும் செய்ய முடியாது. அனைத்து முதலீட்டு முடிவுகளையும் முற்றிலும் சுதந்திரமான மேலாளர்களே எடுக்கின்றனர் என அவர் விளக்கமளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

