அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் விவசாயம் மற்றும் தொழில் துறை உபகரணங்கள் மீதான வரியை 10 புள்ளிகள் குறைப்பதாக செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளார். இதனால் விவசாய இயந்திரங்களுக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறையும். மேலும் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையை அடுத்த ஆண்டு டிசம்பர் 2027 வரை பின்பற்றவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த வரிக்குறைப்பு குறிப்பாக விவசாயிகளுக்கு தங்கள் செலவுகளை மிச்சப்படுத்தவும், விவசாயத் துறையை மேம்படுத்தவும் கண்டிப்பாக உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த இயந்திரங்களுக்கு 15 சதவீத வரி?: பயிர் அறுவடை செய்யும் பெரிய இயந்திரங்கள், கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் புல்டோஸர்கள், தொழிற்சாலைகளில் எடை தூக்கப் பயன்படுத்தப்படும் போர்க்லிப்ட்கள் போன்ற இயந்திரங்களுக்கு இந்த 15 சதவீத வரிக்குறைப்பு பொருந்தும். ஆனால் அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு மட்டும்தான் இந்த வரிச் சலுகைகள் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்ப் சாதூர்யமாக அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத் தயாரிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளார். அதாவது ஒரு வெளிநாட்டு நிறுவனம் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யும் இயந்திரங்களில் 85 சதவீதம் வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஸ்டீல் அல்லது அலுமினியம் பயன்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு 15 சதவீத வரி இன்னும் குறைக்கப்பட்டு 10 சதவீதம் மட்டுமே விதிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை வருகின்ற 2027-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கமே அமெரிக்காவில் முதலீடுகளை அதிகரிப்பது தான். இதனால் அமெரிக்க தொழில்துறை மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிப் பயணிக்கும். இதற்கு முன்னர் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்பர் மற்றும் ஸ்டீல் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருந்தார். ஆனால் தற்போது விவசாயம், வீட்டு வசதி மற்றும் உற்பத்தி துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வரிக்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இந்த வரிக்குறைப்பு நடவடிக்கையால் முக்கியமாக இரண்டு விதமான தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒன்று விவசாயம் சார்ந்த இயந்திரங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள விவசாயிகளுக்கு பணம் மிச்சமாகும். இதனால் அவர்கள் அந்த பணத்தை வேறு விஷயங்களுக்காக செலவு செய்வார்கள். அத்தகைய சூழலில் அமெரிக்காவில் விவசாயம் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அமெரிக்காவிற்கு பல நாடுகள் இயந்திரங்களை இறக்குமதி செய்கிறது. அப்படி இருக்கையில் அமெரிக்கா ஒரு முக்கிய நிபந்தனையும் விதித்துள்ளது. அதாவது 85 சதவீதம் வரை அமெரிக்க இரும்பு அல்லது அலுமினியம் இருந்தால் 10% கூடுதல் வரி. இப்படி இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே ஸ்டீல் மற்றும் காப்பரை வாங்கி பயன்படுத்த தொடங்கும். இதனால் வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாதிப்படையலாம். இது பிற நாடுகள் மட்டும் இன்றி இந்தியாவிற்கும் சவாலாக அமையலாம். டிரம்ப் நிர்வாகத்தின் இந்தப் புதிய வரிக் குறைப்பு நடவடிக்கை எத்தகைய தாக்கத்தை இந்தியாவில் ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications