ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பரஸ்பரம் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ராணுவ அதிகாரிகளுடன் திடீரென அவசர ஆலோசனை நடத்தி இருப்பதால் மிகப்பெரிய தாக்குதலை திட்டமிடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வெள்ளை மாளிகையில் உள்ள அதி-பாதுகாப்பான Situation Room எனப்படும் அவசர கால ஆலோசனை அறையில் அதிபர் டிரம்ப் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளதாக ஆக்சியோஸ் தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. இதன் மூலம் ஈரான் மீது தீவிர தாக்குதலை தொடுக்க அமெரிக்க தயாராகி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் ஈரான் பதில் தாக்குதலே நடத்த முடியாத வகையில் அதன் வளங்களையும் ராணுவ கட்டமைப்புகளையும் அழிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை வலுவிழக்க செய்யும் வகையில் கடும் தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக ஆக்சியோஸ் செய்தி கூறுகிறது.
இந்த கூட்டத்தில் துணை அதிபர் ஜே டி வான்ஸ், பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, படை தளபதிகள், சிஐஏஇ இயக்குநர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.முதலில் ஈரானின் வருவாய் ஆதாரங்களை முற்றிலுமாக முடக்குவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க போகிறதாம். அதிலும் ஈரான் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய நிதி பரிவர்த்தனைகளைத் தடுப்பதற்கான கடுமையான தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஈரானின் ஏவுகணை தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் முக்கிய இராணுவத் தலைமையகங்களை குறிவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது ஈரானின் தாக்குதல் திறனை சிதைப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஈரான் பேச்சுவார்த்தைக்கு இணங்காத பட்சத்தில், அந்நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை முடக்குவதுஎன அமெரிக்கா முடிவு செய்துள்ளதாம். இந்த கூட்டத்திற்கு முன்னதாகவே டிரம்ப் அடுத்த வாரம் ஈரானுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்: என சூசகமாக எச்சரித்திருந்தார். இதனால் வரும் வாரம் என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஈரான் தரப்பிலோ அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் பதில் தாக்குதல் நடத்தப்படும் என திட்டவட்டமாக இருக்கிறது. ஒரு வேளை வரும் வாரம் பெரிய மோதல் வெடித்தால் அது உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தும். வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அது நடந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகமாகும்.
டிரம்ப் அவசர ஆலோசனை நடத்தி இருப்பதால் ஒரு முழுமையான போருக்கு அமெரிக்கா தயாராகி வருகிறதோ என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதையும், இரு நாடுகளும் நேரடி மோதலுக்கு தயாராகி வருவதையும் குறிப்பிடுவதாக தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

