அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மைக்கு வித்திட்டு இருக்கிறது . பல்வேறு நாடுகளின் பங்குச்சந்தைகளையும் பதம் பார்த்துள்ளது. இது அமெரிக்க பங்குச்சந்தையையும் விட்டு வைக்கவில்லை.
டிரம்ப் இறக்குமதி வரி: அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் பல்வேறு நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்கின்றன என கூறி போட்டி வரியை விதித்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இறக்குமதி வரியை அதிகப்படுத்தி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் சில தினங்களில் அந்த உத்தரவை திரும்ப பெற்ற அவர் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை இந்த நாடுகளுக்கு கால அவகாசம் வழங்குவதாக அறிவித்தார்.

ஒரே நாளில் 1 டிரில்லியன் டாலர்: கால அவகாசம் முடிந்ததை அடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை அறிவித்திருக்கிறார். இது உலக அளவில் பல்வேறு பங்கு சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க பங்கு சந்தை வெள்ளிக்கிழமையன்று பெரும் சரிவை சந்தித்தது. அமெரிக்கா பங்குச்சந்தையில் ஒரே நாளில் 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை இழந்து முதலீட்டாளர்கள் கண்ணீரில் இருக்கின்றனர் .
மோசமான வெள்ளி: வார இறுதி நாளான ஆகஸ்ட் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குச் சந்தைக்கு மிக மோசமான ஒரு நாளாக அமைந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட 68 நாடுகளுக்கு 10% முதல் 41% வரை இறக்குமதி வரியை அறிமுகம் செய்திருக்கிறார் . இந்த அறிவிப்பு தான் அமெரிக்க பங்குச்சந்தை சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது.

எவ்வளவு சரிவு: டௌவ் & ஜொன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஏவரேஜ் குறியீடு ஒரே நாளில் 542 புள்ளிகள் அதாவது 1.23 சதவீதம் குறைந்து 43,588 புள்ளிகளாக வர்த்தகத்தை முடித்திருக்கிறது. கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தை சரிவு இதுவாகும். எஸ்&பி 500 குறியீட்டை பொருத்தவரை1.6 சதவீதம் சரிவடைந்து 6,238 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. நாஸ்டாக்கும் பெரிய வீழ்ச்சியை கண்டது, 2.24 சதவீதம் சரிவடைந்து 20,650 புள்ளிகளில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கி சார்ந்த பங்குகள் 1 முதல் 4 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
என்ன காரணம்: கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின் அமெரிக்க பங்குச்சந்தை இப்படி பெரிய அளவிலான வீழ்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அமெரிக்க அரசின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ஜூலை மாதத்தில் அந்த நாட்டில் புதிதாக 73,000 பேர் வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதாக அமெரிக்க அரசிடம் பதிவு செய்திருக்கின்றனர்.
மோசமாகும் வேலைவாய்ப்பு சந்தை: ஏற்கனவே பல்வேறு பெரிய நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருக்கின்றன, புதிதாக படித்து முடித்து வந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு இல்லை வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள எந்த தாக்கம் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது .அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.2 சதவீதமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில் பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பல்வேறு முதலீட்டாளர்களும் பங்குகளை விற்பனை செய்தனர் , இது பங்குச்சந்தைகள் சரிவுக்கு காரணமாகி விட்டன.


Click it and Unblock the Notifications