ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றக் கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன், ஐவாட்ச், ஐமேக் உள்ளிட்டவற்றை சீனாவில் உற்பத்தி செய்துதான் தங்கள் நாட்டில் இறக்குமதி செய்கிறது .
ஆனால் அமெரிக்கா சீனா இடையே அடிக்கடி வர்த்தக போர் ஏற்படுவதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உற்பத்திக்காக சீனாவை மட்டும் சார்ந்திருக்காமல் பல்வேறு நாடுகளிலும் உற்பத்தி மையங்களை நிறுவ வேண்டும் என முடிவு செய்து இந்தியாவில் தன்னுடைய ஐபோன்கள் உற்பத்தியை கொண்டு வந்தது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய இரண்டு நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்து ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்குகின்றன. இத்தகைய சூழலில் தான் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றார்.அவர் சீனாவில் இருந்துஇறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து ஃபோன்களை இறக்குமதி செய்வதற்கு அதிக தொகை செலுத்த வேண்டும் என்பதால் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என திட்டமிட்டது.

இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களிடமும் ஏற்கனவே ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிடமும் உற்பத்தியை பெருக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றக் கூடாது எனக் கூறியிருக்கிறார்.
கத்தார் நாட்டில் அந்நாட்டு அரசு சார்பாக டிரம்புக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர் .இந்த விருந்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கும் கலந்து கொண்டார். அப்போது டொனால்ட் டிரம்ப் மற்றும் டிம் குக் இடையே சந்திப்பு நடைபெற்றது. இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி உள்ளனர்.
அந்த சமயத்தில் தான் அமெரிக்க அதிபர், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை மாற்றுவதை நிறுத்த வேண்டும் என கூறினாராம் . நீங்கள் இந்தியாவில் உங்களுடைய ஐபோன் ஆலைகளை பெரும் அளவு நிறுவி வருகிறீர்கள் ஆனால் என்னுடைய அரசாங்கத்தை பொருத்தவரை இந்தியாவில் நீங்கள் ஐபோன் ஆலைகளை அமைப்பதில் விருப்பமில்லை இந்தியா தன்னை தானே பார்த்துக் கொள்ளும் என்று டிக் குக்கிடம் தெரிவித்தாராம்.
இந்தியாவுக்கு பதிலாக அமெரிக்காவில் உற்பத்தியை பெருக்க வேண்டும் என அவர் கூறினார். உலகிலேயே அதிக அளவு இறக்குமதி வரி கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. இங்கே அமெரிக்க பொருட்களை விற்பனை செய்வது கடினம் என அப்போது டிரம்ப் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தியை 60% அதிகப்படுத்தி இருக்கிறது. 22 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஃபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு விற்பனைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது தவிர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக கடந்த ஜனவரி ,பிப்ரவரி ,மார்ச் ஆகிய மூன்று மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications