வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பதவி காலத்தின் போது ஹெச்1பி விசாவை தடை செய்ய வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால் அவரது நிறுவனமே அந்த விசாவை பயன்படுத்தி வேலைக்கு ஆட்களை பணி அமர்த்த முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்த போது, அமெரிக்க வேலைகளில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கூறி வந்தார். வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதாக அவர் கூறி வந்தார்.

வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்த உதவி செய்யும் ஹெச்1பி விசா முறையை ரத்து செய்ய வேண்டும், அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும், விண்ணப்ப கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், விசா வழங்க தகுதிகளை அதிகரிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான சமூக வலைதள நிறுவனமான ட்ரூத் சோசியல் (TRUTH SOCIAL),கடந்த 2022 ஆம் ஆண்டில் ஹெச்1பி விசா மூலம் ஒரு ஊழியரை பணிக்கு அமர்த்த முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.
அமெரிக்க குடியேற்ற துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஹெச்1பி விசாவிற்கு ட்ரூத் சோசியல் நிறுவனம் விண்ணப்பம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.இதனிடையே ட்ரூத் சோசியல் நிறுவனம் அந்த ஊழியரை பணிக்கு தேர்வு செய்யவில்லை என்றும், தங்கள் நிறுவனம் ஹெச்1பி விசா முறையில் யாரையும் பணிக்கு அமர்த்தாது என்றும் தெரிவித்துள்ளது.

பொதுவாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்த பயன்படுத்தக்கூடிய ஒரு விசா ஹெச்1பி விசா. ஆனால் அதிபராக இருந்தபோது டொனால்ட் டிரம்ப் இந்த விசாவை கடுமையாக எதிர்த்தார்.
மேலும் தன்னுடைய நிறுவனங்களில் இவ்வகை விசாவை பயன்படுத்தி யாரும் பணிக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என கூறி வந்தார். இந்த நிலையில் தான் அவரது சமூக வலைத்தள நிறுவனத்தில் ஹெச்1பி விசா பயன்படுத்துவதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது தற்போது வெளியாகி உள்ளது.
அதேபோல டொனால்ட் டிரம்பின் மருமகன் உருவாக்கிய நிறுவனமும் வெளிநாட்டு ஊழியர் ஒருவரை பணியில் சேர்க்க ஹெச்1பி விசா வழங்குமாறு விண்ணப்பம் செய்திருப்பது தற்போது வெளிவந்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசாவில் ஒருவரை பணிக்கு தேர்வு செய்ய ஒரு ஊழியருக்கு 5,000 டாலர்கள் என்ற அளவில் டெபாசிட் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும். அமெரிக்க குடியேற்ற துறை இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அந்த ஊழியர் அமெரிக்கா சென்று பணியாற்றலாம்.
பொதுவாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசா முறையினை பயன்படுத்தி தான் பல்வேறு ஊழியர்களை பணியில் சேர்க்கின்றன. இந்த விசாவை பயன்படுத்தி தான் பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவில் சென்று பணிபுரிந்து வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications