அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சீனப்பயணம் தான் உலகம் முழுவதுமே உற்றுநோக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. பொருளாதாரம் , உலக அரசியல் என இரண்டிலுமே போட்டி போட்டு கொள்ளும் நாடுகள் அமெரிக்காவும், சீனாவும். இப்படி இரு துருவங்களாக இருக்கும் இரண்டு நாடுகளின் தலைவர்கள் சந்திக்க போவது உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் டிரம்ப். சீனாவுடன் பல வர்த்தக மோதல்களை ஏற்படுத்தி அனைத்திலும் முரண்பாடாக நிற்கும் டிரம்ப் சீனா செல்வது உலக அரசியலில் முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த சந்திப்பு ஈரான் போர் உள்ளிட்ட பல்வேறு உலக பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டும் வகையில் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

ஏனெனில் சீனா - ஈரானுடன் நட்பு நாடாக உள்ளது. அண்மையில் தான் ஈரான் அமைச்சர் சீனாவுக்கு வந்து சென்றார், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள சீனா தான் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி சம்மதிக்க வைத்தது என சொல்லப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-இன் சீன பயணம் ஈரான் போரில் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது.
இதற்கிடையே தன்னுடைய சீன பயணத்தின் போது அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களையும் டிரம்ப் சீனா அழைத்து செல்வது தற்போது உறுதியாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற இருப்பதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னோடு டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஜி ஈ ஏரோஸ்பேஸ் தலைமை செயல் அதிகாரி லாரன்ஸ் கல்ப் மற்றும் போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்க் ஆகியோரை தன்னுடன் அழைத்து செல்கிறார்.

அதேபோல மெட்டா ,ப்ளாக் ராக், ப்ளாக் ஸ்டோன் , மாஸ்டர் கார்டு, விசா போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளும் சீனாவிற்கு பயணம் செய்கிறார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். எனவே டிரம்பின் இந்த பயணம் அரசியல் நோக்கம் கொண்டதாக மட்டும் இல்லாமல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தக்கூடிய ஒரு பயணமாகவும் அமையப் போவது உறுதியாக இருக்கிறது.
குறிப்பாக சீனா போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான அரிய வகை காந்தங்களின் சப்ளை எந்த தடையும் இல்லாமல் தொடர்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன அதிபரை நேரில் சந்தித்தார். இதன் பின் அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்தது ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அது தள்ளிப் போடப்பட்ட நிலையில் இந்த முறை இந்த பயணம் திட்டமிட்டபடி நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications

