பிரிட்டன் பிரதமரும் தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவருமான கீர் ஸ்டார்மர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கட்சியின் உள்ளே அதிகரித்த அழுத்தங்களைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதற்கு காரணமாக இருந்தவர் கீர் ஸ்டார்மர். ஆனால் 2 ஆண்டுகளிலேயே அவரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிரிட்டன் அரசியலில் நிகழ்ந்துள்ள இந்த திடீர் அரசியல் மாற்றம், பிரிட்டனுடன் மிக முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக நாட்டு மக்களுக்காக உரையாற்றிய ஸ்டார்மர், தான் தொழிலாளர் கட்சியின் பொறுப்பை ஏற்றபோது எதிர்கொண்ட சவால்களைப் பகிர்ந்து கொண்டார். "ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நான் தொழிலாளர் கட்சியின் தலைமையை ஏற்றேன். அப்போது என் கட்சி முடிந்துவிட்டது என்று பலர் என்னிடம் கூறினர். ஆனால் நாங்கள் மக்கள் கணிப்புகளை பொய்யாக்கினோம். எங்களின் கட்சியை மாற்றியமைத்தோம்," என்றார்.

"கடின உழைப்பு எங்கள் கட்சியை மாற்றியது. தகுதியும் மரியாதையும் கொண்ட ஒரு நியாயமான நாட்டை உருவாக்க இது உதவியது. அனைவருக்கும் செல்வமும் வாய்ப்பும் கிடைக்கச் செய்தோம்" என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தனது அரசாங்கத்தின் பொருளாதார சாதனைகளை சுட்டிக்காட்டிய அவர், "நாங்கள் வலுவான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கினோம், ஊதியங்களை வேகமாக உயர்த்தினோம், முதலீடுகளை உறுதி செய்தோம், சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டினோம், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தினோம்" என்றார். தனது நிர்வாகம் "ஐந்து லட்சம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது" என்றும் ஸ்டார்மர் கூறினார்.
தனது எதிர்காலம் குறித்த கேள்விகள் கட்சியில் தீவிரமடைந்ததை ஒப்புக்கொண்ட அவர், "அடுத்த தேர்தலுக்கு எங்களை வழிநடத்த நான்தான் சரியான நபரா என்று என் கட்சி தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கான பதிலை நான் கேட்டுவிட்டேன். நான் ராஜினாமா செய்கிறேன்" என்று அறிவித்தார். எவ்வாறாயினும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்காலப் பிரதிமராகத் தொடர்ந்து நீடிப்பேன் என தெரிவித்தார்.
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம் இந்தியாவுடனான உறவுகளில், குறிப்பாக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கீர் ஸ்டார்மர் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இருதரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்தவும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இறக்குமதி வரி குறைப்பு, தகவல் தொழில்நுட்பத் துறைக்கான முக்கிய முதலீடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை பல பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்துவதை இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. தற்போது ஸ்டார்மரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய பிரதமர் பதவியேற்கும் வரை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தற்காலிகத் தொய்வு ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கப் போகும் நபர், இந்தியாவுடனான வர்த்தகக் கொள்கைகளில் என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் அமையும் என்பதால், இந்திய வர்த்தக வட்டாரங்கள் பிரிட்டனின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
பர்ன்ஹாமால் கட்சியின் நிலையை மீண்டும் உயர்த்த முடியும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பினர். இதனால் ஸ்டார்மர் தனது பதவியைத் தக்கவைக்கப் போராடுவதா அல்லது விலகுவதா என்று தீவிரமாக ஆலோசித்தார். இந்நிலையில் தான் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி குறித்து அரசியல் வட்டாரங்களில் கவனம் திரும்பியுள்ளது.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பர்ன்ஹாமுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அவருக்குப் போட்டியாக முன்னாள் சுகாதாரத்துறை செயலர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) களமிறங்கக்கூடும் என்று கூறப்படுகிறது. எனினும், ஸ்ட்ரீட்டிங் பர்ன்ஹாமுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து, எதிர்கால அமைச்சரவையில் ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications


