சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் எப்படி பல நன்மைகள் இருக்கின்றனவோ அதற்கு ஏற்ப தீமைகளும் இருக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாக அடிமைப்படுத்துகின்றன சோஷியல் மீடியாக்கள். குறிப்பாக பதின்ம வயதினரிடம் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த ஸ்கீரின் டைம் குழந்தைகளின், இளம் வயதினரின் மனநிலையிலும் செயல்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெற்றோர் மட்டுமில்லாமல் அரசுகளே தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பிரச்சினை வளர்ந்து விட்டது.
ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்த நிலையில் பிரிட்டன் அரசு ஒரு படி மேலே சென்று 16 வயதுக்கு மேற்பட்டவர்களும் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் படி பிரிட்டனில் 16 மற்றும் 17 வயதுடைய பதின்ம வயதினர் நள்ளிரவு நேரத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில், புதிய டிஜிட்டல் ஊரடங்கு (Digital Curfew) முறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இளைய தலைமுறையினரின் மனநலனை மேம்படுத்தவும் சிறந்த தூக்கம் பெறுவதை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதன்படி 16 மற்றும் 17 வயதுடையவர்களின் சமூக ஊடக செயலிகளில், நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தானாகவே இயங்காதவாறு பிளாக் ஆகும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்படும். இது Default Settingஆகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்ய தூண்டும் Infinite Scroll மற்றும் தானாகவே அடுத்தடுத்து வீடியோக்களை இயக்கும் Auto-play போன்ற அம்சங்கள், 18 வயதுக்குட்பட்டோரின் கணக்குகளில் தானாகவே முடக்கப்படும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
இதுமட்டுமில்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாட்பாட்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள் அவ்வப்போது இடைவெளி எடுப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. தவறான அல்லது ஆபத்தான மனநல ஆலோசனைகளை வழங்கும் AI சேவைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
அண்மையில் பிரிட்டன் அரசு மேற்கொண்ட ஆய்வில், இரவு நேரங்களில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது இளம் தலைமுறையினரின் தூக்கம், படிப்பு மற்றும் குடும்ப உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் இளம் வயதினர் சிறந்த தூக்கத்தை பெறவும், கல்வியில் அதிக கவனம் செலுத்தவும், குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடவும் முடியும் என பிரிட்டன் அமைச்சர் லிஸ் கெண்டல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக கட்டுப்பாடு தொடர்பான புதிய விதிகள் தொடர்பான வரைவு, 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கம் முதலே 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடக தடை அமலுக்கு வரும்போதே, இந்த புதிய கட்டுப்பாடுகளும் செயல்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் தங்கள் போனில் இந்த செட்டிங்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றி கொள்ள முடியும் என்ற அம்சம் இருப்பதால் இந்த திட்டம் எந்த பலனையும் தராது என கூறியுள்ளன.


Click it and Unblock the Notifications

