அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் உடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு 100% உயர்ந்திருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். பல்வேறு நாடுகளிடமிருந்தும் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்திருக்கிறார் டிரம்ப்.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருக்கக்கூடிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 20% வரியை முதலில் விதித்தது. பின்னர் இந்த வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயின. இந்த சூழலில் தான் இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி அமெரிக்காவிற்கு சென்றிருந்தார் .

தன்னுடைய அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒரு பரஸ்பர வணிக ஒப்பந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என மெலோனி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சூழலில் டொனால்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக கூறினாராம்.
100 சதவீதம் இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அவர் உறுதியளித்திருப்பதாக மெலோனி கூறியிருக்கிறார். இந்த வர்த்தக ஒப்பந்தமானது இருதரப்பிற்கும் நியாயத்தை தரும் வகையில் இருக்கும் என டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் புதிதாக வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன் வந்திருக்கின்றன என குறிப்பிட்டு இருக்கும் டிரம்ப், அடுத்தடுத்து பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இருக்கிறது எங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்பாதவர்களுக்கு நாங்கள் பிரத்தியேக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம் என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை வெள்ளை மாளிகையில் வரவேற்ற டொனால்ட் டிரம்ப் உலகில் தற்போது செயல்பட்டு வரும் உண்மையான தலைவர்களுள் மெலோனியும் ஒருவர் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் எனக் கூறினார். எங்களுக்கு இடையே நல்ல நட்புறவு இருக்கிறது என குறிப்பிட்டார். இதனை அடுத்து பேசிய இத்தாலி பிரதமர் மெலோனி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என தெரிவித்தார்.
மேற்குலக நாடுகளை மீண்டும் சிறந்ததாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் , அதற்காக அமெரிக்காவும் நாங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கிறோம் என அப்போது மெலோனி கூறினார். அமெரிக்காவை முக்கியமான கூட்டாளியாக நாங்கள் கருதுவதால் தான் இங்கே வந்து வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என நான் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications