உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே மிக முக்கியமான கனிமவள ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு உக்ரைன் நாட்டில் இருக்கும் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா படையெடுத்தது. இதனை அடுத்து ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் வழங்கி வந்தன. இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றி அமைத்தார்.

அதாவது உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது என அவர் அறிவித்தார். மேலும் போரில் உக்ரைனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா அளித்த உதவிகளுக்கு கைமாறாக அந்த நாட்டில் கிடைக்கும் அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். இது தொடர்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் தற்போது ஒருமித்த கருத்து ஏற்பட்டு பொருளாதார வரைவு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. அமெரிக்கா உக்ரைன் மறுமுதலிட்டு நிதி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைனை ஒரு சுதந்திரமான நாடாக செயல்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளது.
மேலும் அமைதியை நிலைநாட்டவும் அந்த நாட்டை வளப்படுத்தவும் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனிம வள ஒப்பந்தம் இது நாள் வரை இரு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவையே மாற்றி அமைத்திருக்கிறது. உக்ரைனில் இருக்கும் டைட்டானியம், யுரேனியம், லித்தியம், கிராபைட் உள்ளிட்ட கனிம வளங்களை அமெரிக்கா தோண்டி எடுத்து பயன்படுத்த இருக்கிறது.
இந்த கனிம வளங்கள் அனைத்தும் விமான போக்குவரத்து துறை, மின்சார வாகனங்கள் , மருத்துவ கருவிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் முக்கியமாக பயன்படுத்தக்கூடியவை. இவ்வாறு கனிம வளங்களை தோண்டி எடுக்கும் முழு உரிமை அமெரிக்காவிற்கு தரப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு கைமாறாக அமெரிக்கா பல்வேறு முதலீடுகளை மேற்கொண்டு அந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு உதவ வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications