அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபரான நாளே வர்த்தக போருக்கான அடித்தளத்தை அமைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும், ஆனால் கனடா, மெக்சிகோ உடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து 30 நாள் ஒத்திவைக்கப்பட்டது. இக்காலக்கெடு தற்போது முடிந்த நிலையில் அமெரிக்க நேரப்படி மார்ச் 4ஆம் தேதி முதல் அமெரிக்காவின் வரி விதிப்புகள் நடைமுறைக்கு வர உள்ளது.
இதை எதிர்த்து கனடா சுமார் 155 பில்லியன் கனடா டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள வேளையில், தற்போது சீனாவும் களத்தில் இறங்கியுள்ளது.

சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வரி மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று சீன நிதியமைச்சகம் மார்ச் 4 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிதாக விதிக்கப்படும் வரிகள் தொடர்பான அறிக்கையில் சீன அரசு அமெரிக்க பொருட்கள் மீது 10 முதல் 15 சதவீதம் வரை வரியை விதிக்க உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட முக்கிய விவசாயப் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்படும் என்று சீன நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதோடு சோயாபீன்ஸ், சோளம், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, aquatic products, பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் சீன நிதியமைச்சகம் மார்ச் 4 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வரிகளோடு இலவச இணைப்பாக சீன வர்த்தக அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் ஈடுபட்டுள்ள 10 அமெரிக்க நிறுவனங்களை "நம்பமுடியாத நிறுவனங்களின் பட்டியலில்" சேர்க்க முடிவு செய்துள்ளது. இது சீனாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அதிபராக பதவியேற்ற நாளில் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்க உத்தரவிட்டார், இதை தொடர்ந்து அடுத்த சில நாளில் சீனப் பொருட்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்பட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத நிலையில் அதை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது டிரம்ப் அரசு.
அமெரிக்கா இந்த 3 நாடுகள் மீது வரியை விதிக்க மிக முக்கியமான காரணமாக கூறப்படுவது ஃபென்டானில் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சீனா-வில் இருந்து கனடா, மெக்சிகோ நாட்டின் வாயிலாக அமெரிக்காவுக்கு வருவதாக அமெரிக்கா அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் சீனா இதை உறுதியாக மறுத்துள்ளது.
தற்போது அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக கனடா, சீனா ஆகியவை பதிலடியாக வரி விதிப்பை அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை மெக்சிகோ-வும் வரி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications