ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க ரோந்து கப்பல் மீது ஈரானும், ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்காவும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி இருப்பதால் நிலைமை மோசமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் மீது இருமுறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயன்றது. எனினும், அமெரிக்க போர்க்கப்பல் அந்த ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தப்பி வெற்றிகரமாக தற்காத்து கொண்டதுடன், ரோந்து பணியை தொடர்ந்தது. இந்த தாக்குதல்களில் அமெரிக்க தரப்பில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்க படைகள் ஒருங்கிணைந்த வான்வழி தாக்குதல்களை நடத்தி ஈரானின் அரசுடன் தொடர்புடைய 5 கப்பல்களை குறிவைத்து அழித்துள்ளன. ஒமான் வளைகுடாப் பகுதியில் இருந்த கவிக், சார்மினார், ஹொரைசன் 1 மற்றும் ரியெஸ்கோ ஆகிய நான்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்டன. ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள கார்க் தீவு பகுதியில் டெரியா என்ற கப்பல் தகர்க்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு முன்பாக, பாதுகாப்பு கருதி அந்தந்தக் கப்பல்களின் பணியாளர்கள் உடனடியாக கப்பலை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க படைகளால் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஈரானின் இந்த எண்ணெய் கப்பல்கள், ஈரானிய பாதுகாப்பு துறைக்கும், அப்பகுதியில் உள்ள அதன் கூட்டாளிகளுக்கும் நிதியுதவி செய்யும் shadow network-இன் ஒரு பகுதி என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீப நாட்களாக ஈரான் மீது இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஈரானை தனிமைப்படுத்த அந்நாட்டு விமான போக்குவரத்து துறை மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இப்போது ராணுவ தாக்குதல்களும் தீவிரமடைந்துள்ளன.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் செல்லும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக, வணிக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் போர் தீவிரமடையும் அச்சத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 1% உயர்ந்து ஒரு பேரல் 97.92 டாலராக விற்பனையானது. டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் 1.40% அதிகரித்து 94.33 டாலராகவும் விற்கப்பட்டது.
அமெரிக்கா ஈரான் இடையிலான போர் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் இரு தரப்பும் உடன்பாடு எட்டாமல் இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைகளை சில நாடுகள் முன்னெடுத்தன. ஆனால் அதுவும் தோல்வி அடைந்துவிட்டது. ஒரு கருத்தில் கூட இரு தரப்பும் விட்டு கொடுக்க தயாராக இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.


Click it and Unblock the Notifications


