அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அன்றாடம் செய்திகளில் இடம் பிடிக்கிறார் டொனால்ட் டிரம்ப். அதிபர் டிரம்பை பொருத்தவரை அவர் பதவியேற்றதிலிருந்து இன்டெல் நிறுவனத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார் .
உலகின் முன்னணி சிப் உற்பத்தி நிறுவனமான இன்டெல் நிறுவனத்தில் தற்போது அமெரிக்க அரசாங்கம் 10 சதவீத பங்குகளை பெற்றிருக்கிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப எடுத்து வந்த தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் இன்டெல் நிறுவனத்திற்கு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. இந்த மானியங்களுக்கு ஈடாக இன்டெல் நிறுவனம் அமெரிக்கா அரசாங்கத்திற்கு அதன் பங்கில் ஒரு கணிசமான சதவீதத்தை வழங்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து இன்டெல் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.

இதனிடையே இன்டெல் நிறுவனமும் டிரம்பின் அழுத்தத்திற்கு அடி பணிந்து அதன் வணிகத்தில் 10% பங்குகளை வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது . இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க அரசாங்கம் 433 மில்லியன் பொதுவான பங்குகளை பெறும். இது இன்டெல் நிறுவன பங்குகளின் 10 சதவீத பங்குகள் ஆகும். இந்த ஒப்பந்தத்தை இன்டெல் நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது.
இதன் மூலம் இன்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க அரசு மாறி இருக்கிறது . எனவே இந்த நிறுவனத்தின் எந்த ஒரு முடிவும் இனி அமெரிக்க அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் பெற முடியாது. இது பெரிய மைல்கல் என கூறியிருக்கும் டிரம்ப் இன்டெல் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப் போகிறது என தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா அரசாங்கம் இந்த நிறுவன பங்குகளை வாங்குவதற்கு ஒரு பைசா கூட புதிதாக செலவிடவில்லை என தெரிவித்திருக்கும் அவர் இது அமெரிக்கர்களுக்கு மிகச்சிறந்த ஒரு ஒப்பந்தமாக மாறும் என கூறியிருக்கிறார்.
உலக அளவிலான சிப் உற்பத்தியில் அமெரிக்காவை முன்னணி நாடாக நிலை நிறுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் டொனால்ட் டிரம்ப் இதற்காகத்தான் அவர் இன்டெல் நிறுவனத்திற்கு மானியங்களை அள்ளி வழங்கி தற்போது பங்குகளையும் வாங்கியுள்ளார்.
இன்டெல் நிறுவனத்திடம் எப்படி மானியங்களுக்கு ஈடாக பங்கினை வாங்கி இருக்கிறாரோ அதே போல அமெரிக்க அரசின் மானியங்களை பெறும் பல்வேறு நிறுவனங்களிடமும் அவர் இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications