சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் மின் உற்பத்திக்கு தேவையான பொருட்களுக்கு ஜனவரி மாதம் முதல் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் வேஃபர்கள் மற்றும் சில டங்ஸ்டன் பொருட்கள் மற்றும் பாலி சிலிக்கான் ஆகியவற்றுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து 25 முதல் 50 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான கேத்தரின் டை தன்னுடைய அறிக்கையில் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ளார்.

சீனா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பதன் மூலம் உள்நாட்டில் தயார் செய்யப்படும் சூரிய ஒளி மின் சக்திக்கு தேவையான உபகரணங்களின் டிமாண்ட் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின் கீழ் பசுமை எரிசக்தி பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு உள்நாட்டு முதலீடுகள் தொடங்கப்பட்டுள்ளன, இதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்படக்கூடிய சோலார் பேனல் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகமாகும் எனக் கூறியுள்ளார்.
தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான சீனாவின் கொள்கைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தான் இந்த இறக்குமதி வரியானது உயர்த்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். இதன்படி அமெரிக்காவின் " மற்ற முக்கியமான தாதுக்கள்" என்ற பிரிவின் கீழ் உள்ள மூன்று துணை பிரிவுகளில் இறக்குமதி செய்யப்படும் சீனாவை சேர்ந்த தாதுக்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் தான் டங்க்ஸ்டன் இடம்பெற்றுள்ளது.
மேலும் சூரிய மின்கலங்கள் என்ற பிரிவின் கீழுள்ள இரண்டு துணை பிரிவுகளுக்கான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சோலார் வேஃபர்கள் மற்றும் பாலி சிலிக்கான் ஆகியவை அடங்கும்.
சீனா தன்னுடைய நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளை மாற்றி இருந்தாலும் சைபர் திருட்டு மற்றும் தொழில்துறை உளவு போன்ற தீங்கு விளைவிக்கும் அதன் நடைமுறைகள் தொடர்கின்றன என்பதாலேயே இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அரசு விளக்கம் தந்துள்ளது.
மற்ற நாடுகளின் உற்பத்தியை தடுத்து குறிப்பிட்ட சில பொருட்களுக்கு தங்கள் நாட்டையே அவை சார்ந்திருக்க வேண்டும் என்ற கொள்கையை சீனா பின்பற்றி வருகிறது என அமெரிக்க அரசு கடுமையாக சாடியுள்ளது.
உலகளவில் 80 சதவீத டங்ஸ்டன் சீனாவில் தான் இருக்கிறது என்பதால் பல்வேறு நாடுகளும் சீனாவை தான் இதற்காக சார்ந்திருக்க வேண்டி உள்ளது என்பதால் அதற்கு மட்டும் 25% வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மேலும் பாதிக்கும் என சொல்லப்படுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications