சமீப காலமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் நடந்த போர் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதலைத் தொடர, ஈரானும் தொடர்ந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இந்தப் போர் பதற்றத்தின் காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. அமெரிக்கா ஈரான் மட்டுமின்றி இந்தியாவிலும் கேஸ் விலை, கச்சா எண்ணெய் விலை, பெட்ரோல், டீசல் விலை என அனைத்திலும் விலை உயர்வு ஏற்பட்டது. ஏனெனில் ஈரான் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. இந்த வழியாகத்தான் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சிலிண்டர் போன்ற பொருட்கள் உலக நாடுகளைச் சென்றடைகிறது.
எனவே இந்தத் தொடர் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அமெரிக்கா பிரதிநிதிகள் சபை, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவில் எந்த ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டாலும் அது வாக்கெடுப்பு முறையில் இருக்கும். அந்த வகையில் ட்ரம்பின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து, அவருடைய சொந்த கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
டிரம்ப்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த நால்வர், அவர் ஈரான் மீது போர் தொடுப்பது தங்களுக்கு பிடிக்கவில்லை என எதிர்ப்பை காண்பித்துள்ளனர். பிப்ரவரி மாதம் தொடங்கிய போருக்கு ஒரு முட்டுக்கட்டை போட வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டது. ட்ரம்பின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்காக பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் நான்காவது முயற்சி தான் இந்த வாக்கெடுப்பு. ட்ரம்ப் போரை நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்திற்கு 215 பேர் வாக்களித்துள்ளனர்.

பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக ஈரான் மட்டும் தனித்து நின்று தாக்குதலைத் தொடங்கியது. முதலில் வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கியது. பின்னர் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான வழித்தடமாக இருக்கும் ஹார்மோஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் உலக அளவில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம்.
ட்ரம்பின் நடவடிக்கை குறித்து பேசிய ஹவுஸ் ஃபாரின் அஃபயர்ஸ் கமிட்டியின் ரெப்ரசன்டேடிவ் கிரிகாரி மீக்ஸ், ட்ரம்ப்பின் போர் நடவடிக்கையால் எந்த ஒரு குறிக்கோளும் நிறைவேற்றப்படவில்லை. சுருக்கமாக சொன்னால் ஒரு இலக்கே இல்லாத போர் என்று இதைச் சொல்லலாம். இப்படி ஒரு போரை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. இவருடைய தொடர் நடவடிக்கையால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர், என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.
இப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல்சபையில் இந்த தீர்மானம் ஜெயித்துவிட்டது. ஆனால் அதன் பிறகு செனட் சபையிலும் இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படும். இங்கு தான் பிரச்சனை இருக்கிறது. செனட் சபையில் ட்ரம்பின் சொந்தக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் இருக்கின்றனர். இதனால் அவர்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கின்றனரா? இல்லையா? என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். ஒருவேளை அவர்கள் ட்ரம்பின் நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தால் இந்த தீர்மானம் தோல்வியில் முடியும்.
ஒருவேளை செனேட் சபையிலும் இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. ஏதேனும் ஒரு சில காரணங்களை காட்டி ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த சட்டத்தில் சில காரணங்கள் இருக்கவே செய்கின்றன. இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications