அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. ஒரு புறம் அமெரிக்க இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் திடீரென அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஈரானுக்கு சொந்தமான Qeshm தீவின் மீது அமெரிக்கா திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடித்துள்ளது. இந்த மோதல் செய்தி வெளிவந்த உடனே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியுள்ளது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் 0.5% அதிகரித்து ஒரு பீப்பாய் 105.25 டாலராக உள்ளது. அமெரிக்க டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் (US WTI crude) ஒரு பீப்பாய் 96.93 டாலராக உள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் தகவல்படி, திங்கட்கிழமை அன்று அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இதுபோன்ற பல சிறிய அளவிலான ரகசிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. விரைவில் அமெரிக்கா பெரிய அளவிலான இராணுவ மோதலுக்கு தயாராவதாக நட்பு நாடுகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலுக்கு அருகில் கெஷ்ம் தீவு அமைந்துள்ளது. இது உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கியமான பாதையாகும்.
இந்த தீவில் ஈரானின் நிலத்தடி ஏவுகணை தளம், கடற்படை தளம் மற்றும் ஒரு முக்கிய நன்னீர் ஆலை ஆகியவை அமைந்துள்ளன. ஏற்கனவே ஒரு முறை அமெரிக்கா இந்த தீவை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிப்பதாக பேட்டி அளித்ததால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று சரிந்திருந்தது. இதனால் அமெரிக்க இடைக்கால தேர்தல்களுக்கு பிறகு அமெரிக்கா பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் என்ற அச்சம் சற்று குறைந்தது. ஆனால் திடீரென அமெரிக்கா இப்படி ஒரு தாக்குதலை நிகழ்த்தி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், கத்தார் நாட்டின் மத்தியஸ்தர்கள் மூலம் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருவதாக கூறினார். இருப்பினும், இந்த முயற்சிகள் இதுவரை எந்தவொரு உறுதியான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும் வழிவகுக்கவில்லை.


Click it and Unblock the Notifications

