மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடித்துள்ளது, அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக பதிலடி தாக்குதல்களில் ஈடுபட்டு உள்ளனர். ஈரான் நேற்று ஹார்முஸ் வழித்தடத்தில் ஓமானிய எல்லை வழியாக சென்ற ஒரு சிங்கப்பூர் கப்பல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி ஷாக் கொடுத்துள்ளது.
உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் நடைபெற்ற இந்த மோதல், உலகளாவிய எண்ணெய் சந்தை மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் மீண்டும் புதிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பதிலடி
அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை அமைப்பான சென்ட்காம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று சிங்கப்பூர் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்குப் பதிலடியாக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள சிரிக் துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு மையங்கள், கடலோர ரேடார் நிலையங்கள் ஆகியவற்றை அமெரிக்க போர் விமானங்கள் குறிவைத்து தாக்கியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச வர்த்தகத்தின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் ஈரான் செயல்பட்டு வருவதாகவும், அதற்கு வலுவான பதிலடி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை அருகே தொடர் தாக்குதல்
அமெரிக்க தாக்குதல் அறிவிப்புக்குப் பிறகு, தெற்கு ஈரானின் சிரிக் பகுதி மற்றும் ஹார்முஸ் நீரிணை அருகே தொடர்ச்சியாக மூன்று வெடிக்குண்டு சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "அதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்" என்று பதிலளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ராணுவ நடவடிக்கை நடைபெற்றது.
அமெரிக்க தளங்களை குறிவைத்ததாக ஈரான் அறிவிப்பு
அமெரிக்க தாக்குதலுக்கு சில மணி நேரங்களிலேயே ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) பதிலடி தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. அரசு செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட தகவலின்படி, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது. எந்த இடங்கள் குறிவைக்கப்பட்டன, சேதம் எவ்வளவு என்பது குறுத்து அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.
மேலும், "மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், இதைவிட விரிவான மற்றும் கடுமையான பதிலடி வழங்கப்படும்" என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை முழுவதும் எங்களுக்கே - ஈரான்
ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் 5-வது பிரிவின்படி ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து மற்றும் கப்பல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈரானுக்கே உள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், தனது பதில் நடவடிக்கைகள் தற்போதையதை விட மிகப்பெரியதாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை
உலகளவில் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் குறிப்பிடத்தக்க பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. எனவே, இந்தப் பகுதியில் ஏற்படும் சிறிய பாதிப்பும் சர்வதேச எண்ணெய் விலை, கப்பல் காப்பீட்டு செலவு, சரக்கு போக்குவரத்து மற்றும் உலக வர்த்தகத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
தற்போதைய அமெரிக்கா - ஈரான் மோதல் மேலும் விரிவடையுமா அல்லது தூதரக பேச்சுவார்த்தை மூலம் பதற்றம் குறையுமா என்பது உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வரும் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. இந்த மோதல் எந்த திசையில் செல்லும் என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications