அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 60 நாடுகள் மீது வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் அதிகப்படியான இறக்குமதி வரியை விதித்து சர்வதேச அளவிலான வர்த்தக போருக்கு அழைப்பு விடுத்துள்ளது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் ரெசிஷன் அச்சம் வரும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனடா, சீனா ஆகிய நாடுகள் பதிலடி கொடுத்திருக்கும் வேளையில், தென்கிழக்கு நாடுகளில் பவுர்ஹவுஸ் ஆக இருக்கும் வியட்நாம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு அமெரிக்க ஜனாதிபதி, வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான To Lam உடன் பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று டிரம்ப் டூருத் சோஷியல் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முடிந்தால், வியட்நாம் அமெரிக்கப் பொருட்கள் மீதான அந்நாட்டின் வரிகளைப் பூஜ்ஜியமாகக் குறைக்க விரும்புவதாக To Lam தெரிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளதாகவும், விரைவில் இதற்கான சந்திப்பு நடக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு, வியட்நாம் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 46 சதவீதம் என்ற அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து வியட்நாமின் பிரதமர் இரு நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை மேற்கொள்ள விரைவு குழுவை உடனடியாக அமைக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதோடு நிற்காமல் வியட்நாம் நாட்டின் துணைப் பிரதமரை அமெரிக்காவிற்குப் பணி காரணமாகச் செல்ல உள்ளார், இது அனைத்தும் To Lam மற்றும் Trump மத்தியிலான பேச்சுவார்த்தைக்குப் பின்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் அமெரிக்கா உடன் சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தைச் சாத்தியப்படுத்தினால் பல நாடுகளுக்கு இது வழிகாட்டியாக இருக்கும்.
டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்புகளுக்கு முன்பே, வியட்நாம் அரசு அமெரிக்க கார்கள், திரவமாக்கப்பட்ட எரிவாயு மற்றும் சில விவசாய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் தான் டிரம்ப் வியட்நாம் நாட்டின் பொருட்களுக்கு 46 சதவீத வரியை விதித்தது. சீனா மற்றும் மெக்சிகோவிற்குப் பிறகு வியட்நாமுக்கு தான் அமெரிக்கா அதிக வரியை விதித்துள்ளது.
அமெரிக்க கடந்த ஆண்டு வியட்நாமிலிருந்து 136.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது, இது வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தைக் குறிக்கிறது. இதேபோல் டிரம்ப்-ன் கடந்த ஆட்சியில் சீனா மீது தொடுத்த வர்த்தக போருக்கு பின்பு சீனாவில் இருந்து வெளியேறிய பெரும்பாலான உற்பத்திகள் வியட்நாம் நாட்டிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது வியட்நாம் சீனாவின் மாற்று உற்பத்தி தளமாகக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications