அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் உலகளவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் அனைத்து விதமான விசா நேர்காணல்களையும் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வருவதை கட்டுப்படுத்தும் நோக்கில் விசா நடைமுறைகளை கடுமையாக்கி உள்ளது. இதனல் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள், ஐடி ஊழியர்கள் விசா கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் உலகில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் விசா நேர்காணல்களை ரத்து செய்து, விசா நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது தூதரக அதிகாரிகளுக்காக உலகளாவிய புதிய பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளதாம். இந்த பயிற்சிக்காகவே விசா நேர்காணல தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது. அதாவது விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவின் பொது நலத்திட்ட உதவிகளை சார்ந்து வாழும் நிலைக்கு மாறுவார்களா என்பதை துல்லியமாக கண்டறிவதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்கச் சட்ட விததிகளின்படி, தகுதியான அமெரிக்க குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது நலன்களை பெறாமல், தாங்களே சொந்தமாக வாழக்கூடியவர்களா என்பதை அதிகாரிகள் கடுமையாக சோதிப்பார்கள். அனைத்து அதிகாரிகளும் ஒரே சீராக விண்ணப்பதாரர்களை மதிப்பிடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த உலகளாவிய பயிற்சி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.
இதனால் ஏற்கனவே விசா நேர்காணலுக்கு தேதி ஒதுக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அவர்களின் அப்பாயின்மெட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவோ அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவோ மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், விசா சேவைகள் எப்போது மீண்டும் முழுமையாக தொடங்கும் என்பது குறித்து வெளியுறவுத்துறை இன்னும் அதிகாரப்பூர்வமான தேதியை வெளியிடவில்லை.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கையால் வெளிநாடுகளுக்கு நேர்காணலுக்காக செல்லும் பல விண்ணப்பதாரர்கள் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாதக்கணக்கில் தாமதம் ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டவர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போகிறது என கூறி ஹெச்1பி விசா நடைமுறைகளை கடுமையாக்கியுள்ளது. மேலும் பல்வேறு வகையான விசா நடைமுறைகளிலும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவிற்குள் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், கடுமையான விதிகளை கொண்டுவரவும் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் பரந்த அளவிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது. முன்னதாக சுற்றுலா மற்றும் வணிக விசாக்களை ரத்து செய்வது குறித்தும், டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications

