அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வராமல் நீடிக்கும் நிலையில் ஈரான் மீது பயங்கர தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பின் ஈரான் மீது தீவிர ராணுவ தாக்குதல்களை தொடங்க அமெரிக்கா திட்டமிடுகிறதாம். இது குறித்து அமெரிக்கா தனது வளைகுடா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளதாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது புதிய ராணுவ தாக்குதல்களை நடத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. இருப்பினும், நவம்பர் 3-ஆம் தேதி இடைக்கால தேர்தல்கள் முடிந்தவுடன், புதிய ராணுவ நடவடிக்கைகளை உத்தரவிடுவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஈரானுக்கு எதிரான புதிய ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டால், அது பல நாட்களுக்கு தொடரக்கூடும் என அமெரிக்க அதிகாரிகள் பிராந்திய நட்பு நாடுகளுக்கு எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் தாக்குதல் நடத்தினால் , ஈரான் வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் என அஞ்சப்படுகிறது. இதனால், வளைகுடா நாடுகள் மற்றும் பிராந்திய நட்பு நாடுகள் உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாத இறுதியில் பென்டகன் அமைப்பு யுஎஸ்எஸ் தியூடோர் ரூஸ்வெல்ட் விமானம் தாங்கி போர்க்கப்பல், படைவீரர்கள் மற்றும் சுமார் 9,000 வீரர்களை தாங்கி செல்லும் நீர்மூழ்கி கப்பல்களையும் பாரசீக வளைகுடா பகுதிக்கு அனுப்பி வைதுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் அமெரிக்க கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 20,000-ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்கா இதுவரை 47.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈரான் போருக்காக மட்டுமே செலவு செய்துள்ளது. விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இல்லை என மக்கள் அல்லல்படும் நிலையில் ஈரான் போருக்கு இவ்வளவு செலவு அவசியாமா என மக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் டிரம்ப் மீது அதிருப்தி அதிகமாகி இருக்கிறதாம்.
இதற்கிடையே ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தாங்கள் இப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ஈரான் முன்மொழிந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்க வேண்டும், போர் நிறுத்தம் வேண்டும் என்பது தான் ஈரானின் நிலைப்பாடு என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications

